மேலும் இரண்டு வினாத்தாள்கள் வெளியாகின : கல்வி அதிகாரிகள் பெரும் குழப்பத்தில்
வட மத்திய மாகாணத்தில்(north central province) 11ஆம் தர சிங்கள இலக்கிய வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே வெளியாகியுள்ளதாக மாகாண கல்விச் செயலாளர் சிறிமெவன் தர்மசேன தெரிவித்த நிலையில் தற்போது மேலும் இரண்டு வினாத்தாள்கள் வெளியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி 11ம் தர தவணைப் பரீட்சைக்கான விஞ்ஞானம் மற்றும் ஆங்கில பாடங்களுக்குரிய வினாத்தாள்கள் வௌியாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
“இன்றைய(06) பரீட்சை வினாத்தாளான சிங்கள இலக்கியம் வெளியானதாக நேற்று(05) நள்ளிரவு முதலாவது செய்தி கிடைத்தது. அதன்படி இன்று காலை அந்த பரீட்சை நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க முடிவு செய்தோம்.
மேலும் இரண்டு வினாத்தாள்கள் வெளியாகின
ஆனால் இன்று பிற்பகலில், நாளை(07) மற்றும் நாளை மறுநாள்(08) திட்டமிடப்பட்ட விஞ்ஞானம் மற்றும் ஆங்கில வினாத்தாள்கள் வெளியானதாக தகவல் கிடைத்தது." இந்த வினாத்தாள்கள் வெளியானது தொடர்பாக அநுராதபுரம் தலைமையக காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பதை கண்டறிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்கள் கசிவு
இலங்கையில் அண்மைக்காலமாக பரீட்சை வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாவது கல்வி அதிகாரிகள் மட்டத்தில் பெரும் குழப்பத்தை தோற்றுவித்துள்ளது.
கடந்த வருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய மூன்று கேள்விகள் பரீட்சைக்கு முன்னரே வெளியாகி அந்த விடயம் நீதிமன்றம் வரை சென்றதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |