இந்திய எல்லையை கடக்க முயன்ற இரு பாக்கிஸ்தானியர்கள் சுட்டுக்கொலை
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள சர்வதேச எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் பக்கத்திலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றதாகக் கூறப்படும் இருவர் அந்நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினரால் (BSF) சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
தர்ன் தாரன் மாவட்டத்தின் கல்ரா பகுதியில் உள்ள ராஜோக் எல்லைச் சாவடிக்கு அருகிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தான் பகுதியிலிருந்து மூவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இந்திய எல்லையை நோக்கி முன்னேறுவதை எல்லைப் பாதுகாப்புப் படையினர் அவதானித்ததாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் அடையாளம்
இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் அவர்களை எச்சரித்து, மேலும் முன்னேற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். எனினும், பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அவர்கள் தொடர்ந்து இந்திய எல்லையை நோக்கி முன்னேறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, BSF வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் அடையாளம் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
இதனிடையே, மூன்றாவது நபர் பாகிஸ்தான் எல்லையை நோக்கித் தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த இருவரின் சடலங்களும் பிரேதப் பரிசோதனைக்காக பஞ்சாப் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் BSF அதிகாரிகளும் உள்ளூர் காவல்துறையினரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சம்பவம் இடம்பெற்ற பகுதியில் மேலதிக தேடுதல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.