யாழில் துயரம் - மூன்று வயது குழந்தையும் தாய் மாமனையும் பலியெடுத்த கிணறு
யாழில் (Jaffna) தவறுதலாக கிணற்றில் விழுந்து மூன்று வயது குழந்தையும் தாய் மாமனும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (17) யாழ்ப்பாணம் சங்கரத்தை பகுதியில் உள்ள திக்கிராய்க் குளத்தில் அருகில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த தனுசன் டனுசன் என்ற மூன்று வயது ஆண் குழந்தையும் மற்றும் கல்லூரி வீதி, வட்டுத்தெற்கு வட்டுக்கோட்டையைச் சேர்ந்த பெருமாள் மகிந்தன் (வயது 30) என்ற தாய் மாமனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
ஆண் குழந்தை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வட்டுக்கோட்டை தெற்கு பகுதியினை சேர்ந்த பெருமாள் மகிந்தன் அவரின் மனைவி, தங்கை மற்றும் மருமகனான தனுசன் டனுசன் ஆகியோர் துணவி பகுதிக்கு சென்றுவிட்டு மீள தமது வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
இந்தநிலையில், பெருமாள் மகிந்தன் தனது மருமகனை அழைத்து கொண்டு துவிச்சக்கர வண்டியில் சென்றுள்ளார்.
இதையடுத்து, சற்று நேரம் கழித்து குறித்த வீதியால் வருகை தந்த பெருமாள் மகிந்தனின் தங்கை மற்றும் மனைவி வீதியில் நின்ற துவிச்சக்கர வண்டியினை அவதானித்து தமது மூன்று வயது பிள்ளையை தேடியுள்ளனர்.
இந்நிலையில், மூன்று வயது சிறுவன் வயல் கிணற்றில் மிதந்த நிலையில் அவரை மீட்டு அம்புலன்ஸ் மூலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும், மூன்று வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
காவல்துறையினர் சந்தேகம்
இதையடுத்து, குறித்த இடத்திற்கு தொடர்ந்து விரைந்த காவல்துறையினர், வெளியே கழற்றி வைத்திருந்த பாதணியை அடிப்படையாக கொண்டு கிணற்றில் தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.
இதன் பொழுது குறித்த சிறுவனின் தாய் மாமனின் சடலத்தினை கைப்பற்றியுள்ளனர்.
தொடர்ந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் தாய் மாமன் வயலை காட்டுவதற்கு சிறுவனை அழைத்து சென்றவேளை சிறுவன் தவறி வீழ்ந்து பின்னர் அவனை காப்பாற்ற குறித்த நபர் கிணற்றில் வீழ்ந்து இறந்திருக்கலாம் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




