யாழில் இன்று இடம்பெற்ற இருவேறு உயிரிழப்புகள்
யாழில் காய்ச்சல் காரணமாக ஆணொருவர் இன்று உயிரிழந்துள்ளார். கொழும்புத்துறை - ஹெலன்தோட்டத்தை சேர்ந்த கிறிஸ்ரி ஜெயானந்தன் யூட்கிமோசன் (வயது 32) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த 21ஆம் திகதி காலை இவருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுள்ளார். இருப்பினும் காய்ச்சல் குணமாகாததால் 22ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
காய்ச்சல் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

இதேவேளை யாழில் திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண்ணொருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி - கலாசாலை வீதியைச் சேர்ந்த சுபாகரன் ரதினி (வயது 49) என்ற, 4 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மயங்கி விழுந்த குடும்ப பெண் உயிரிழப்பு
இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் இன்று காலை கழிப்பறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராத காரணத்தால் மகன் அவரை தேடிச்சென்று பார்த்தவேளை மயக்க நிலையில் காணப்பட்டுள்ளார்.

பின்னர் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |