கண்டி மகாவலி ஆற்றில் மூழ்கி இரு மாணவர்கள் மாயம்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்!
கண்டி, தென்னேகும்புர பாலத்திற்கு அண்மித்த பகுதியில் உள்ள மகாவலி ஆற்றில் மூழ்கி இரு பாடசாலை மாணவர்கள் காணாமல் போயுள்ளனர்.
அதன்படி, குறித்த மாணவர்கள் இருவரும் மகாவலி கங்கையில் இறங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு காணாமல் போனவர்கள் தென்னேகும்புர பிரதேசத்தில் வசித்து வருபவர்கள் என தெரியவந்துள்ளது.
மாணவர்கள் மாயம்
கண்டியில் உள்ள இரு வேறு பாடசாலைகளில் கல்வி கற்று வரும் நிலையில் 9 ஆம் மற்றும் 8 ஆம் தரங்களில் கல்விக் கற்று வரும் 14 வயதுடைய ரவிச்சந்திரன் ஜெகதீஷ் மற்றும் எம்.மிலான் ஆகிய இரு மாணவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
குறித்த மாணவர்கள் இருவரும் நேற்று மாலையில் வளர்ப்பு மீன் வாங்க திகன பிரதேசத்திற்கு செல்வதாகக் கூறி தத்தமது வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று (08.10.2025) மாலை குறித்த மாணவர்கள் இருவரும் மகாவலி கங்கையில் இறங்கி, அங்கு காணப்படும் பாறையொன்றில் இருந்ததை அங்கிருந்த மீனவர் ஒருவர் காவல்துறைக்கு தெரிவித்துள்ளார்.
இந்த மீனவர், மாணவர்கள் இருவரையும் ஆற்றில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்திய போதிலும் அவர்களுக்கு நீச்சல் நன்றாக தெரியும் என மீனவருக்கு கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், மழை காரணமாக ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும், அவர்கள் பாறையில் இல்லாததால் இரண்டு மாணவர்களும் ஆற்றைக் கடந்திருக்க வேண்டும் என தான் நினைத்ததாகவும் மீனவர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
தேடுதல் நடவடிக்கை
மேலும் பலர், இரண்டு மாணவர்களும் மகாவலி ஆற்றில் இறங்குவதைக் கண்டதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.
எனினும், காணாமல் போன ஜெகதீஷ் என்ற மாணவனின் தாய் தனது மகனுக்கு நீச்சல் தெரியாது எனவும் தனது மகன் ஒருபோதும் மகாவலி ஆற்றில் நீந்தச் செல்ல மாட்டார் எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை, காணாமல் போன இரண்டு மாணவர்களின் நண்பரின் தந்தை, இரண்டு மாணவர்களும் தனது மகனை மகாவலி ஆற்றில் நீந்த அழைத்ததாகவும், ஆனால் அவர் அவர்களுடன் செல்லவில்லை என்றும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். ஷ
எவ்வாறாயினும், காணாமல் போன மாணவர்களைத் தேடுவதற்காக கண்டி தலைமையக காவல்துறை மற்றும் பலகொல்ல காவல்துறை இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
