ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற சந்தேகத்திற்கிடமான 02 மரணங்கள்
கிரிந்திவெல காவல் பிரிவு மற்றும் வலஸ்முல்ல காவல் பிரிவில் இரண்டு சந்தேகத்திற்கிடமான மரணங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகத்திற்கிடமான மரணங்கள் நேற்று முன்தினம் (12) பதிவாகியுள்ளன.
வலஸ்முல்லை காவல் பிரிவிற்குட்பட்ட கினிகல்கொடெல்லய பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் தலையில் பல இரத்தக் கறைகள் மற்றும் காயங்கள் காணப்பட்டதை அவதானித்த நிலையில் இந்த மரணம் கொலையா என்பது தொடர்பில் வலஸ்முல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை கிரிந்திவெல-ஹங்கமுவத்த பிரதேசத்தில் வீடொன்றுக்கு அருகாமையில் தாக்குதலுக்கு இலக்காகி கீழே விழுந்த நபர் ஒருவர், ரதாவான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உடகம பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தாக்குதலினால் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் உயிரிழந்தாரா என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிந்திவெல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் பார்வையிடுங்கள்