மூன்றாம் உலகப் போர் பதற்றம்: புடினுக்கு எதிராக ட்ரம்பை தூண்டும் பிரித்தானியா
ரஷ்யாவை (Russia) தூண்டிவிட்டு மூன்றாம் உலகப் போருக்கான ஆபத்தை வரவழைப்பதுடன், விளாடிமிர் புடினுக்கு (Vladimir Putin) எதிராக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பையும் (Donald Trum) தூண்டி விட பிரித்தானியா முயல்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை ரஷ்ய உளவுத்துறை தலைவரும் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் முன்னாள் தலைவருமான நிகோலாய் பட்ருஷேவ் (Nikolai Patrushev) தெரிவித்துள்ளார்.
பால்டிக் கடலில் உக்ரைனுடன் சேர்ந்து பிரித்தானியாவும் ரஷ்ய எதிர்ப்பு ஆத்திரமூட்டல்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போர் கப்பல்
அமெரிக்க போர் கப்பல் மீது போலி ரஷ்ய டார்பிடோ தாக்குதல் சம்பவம் இதன் ஒரு பகுதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சோவியத் காலத்தில் தயாரிக்கப்பட்ட டார்பிடோவை பிரித்தானியாவிற்கு உக்ரைன் அளித்துள்ள ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய - அமெரிக்க உறவை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் பிரித்தானியாவும் களமிறங்கியுள்ளதாக குற்றஞ்சாட்டும் அவர், உக்ரைனுக்கு முழு அளவிலான இராணுவ உதவியைத் தொடர அமெரிக்காவை சமாதானப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
போருக்கான ஒத்திகை
நேட்டோவின் தற்போதைய நடவடிக்கைகள் அனைத்தும் ரஷ்யாவிற்கு எதிரான முழுவீச்சிலான போருக்கான ஒத்திகை என்றே அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா ஒருபோதும் போரை நாடுவதில்லை என குறிப்பிட்டுள்ள நிகோலாய் பட்ருஷேவ், ஆனால் அதன் தேசிய நலன்களையும் அதன் குடிமக்களின் பாதுகாப்பையும் கிடைக்கக்கூடிய எல்லா வழிகளிலும் பாதுகாக்கும் என நிகோலாய் பட்ருஷேவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் அணு ஆயுதக் கவசம் எங்களது நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு சிறந்த உத்தரவாதம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அரசியலில் செல்வாக்கு மிகுந்த நிகோலாய் பட்ருஷேவ், ஜனாதிபதியாக விளாடிமிர் புடின் பதவி துறக்கும் போது அந்த பொறுப்புக்கு தமது மகனைக் கொண்டுவர தற்போதே நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
