மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு: 12 நாடுகளுக்குப் பயண எச்சரிக்கை விடுத்த பிரித்தானியா
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, ஓமான், கட்டார், பாகிஸ்தான், பஹ்ரைன், சவூதி அரேபியா, ஈராக், யேமன், குவைத், பலஸ்தீனம், இஸ்ரேல், சிரியா மற்றும் ஈரான் உள்ளிட்ட 12 நாடுகளுக்கான பயண எச்சரிக்கையைப் பிரித்தானியா புதுப்பித்துள்ளது.
நேற்று (27) பிற்பகல் வெளியிடப்பட்ட இந்தப் புதுப்பிக்கப்பட்ட அறிவிப்பில், பிராந்தியத்தில் திடீரென மோதல்கள் தீவிரமடையும் அபாயம் அதிகமாகக் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மோதல்கள் ஆரம்பித்ததிலிருந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய அமைப்புகள், நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் வசதிகளை இலக்கு வைக்கப்போவதாக ஈரான் அறிவித்துள்ளதாகவும் அந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயண எச்சரிக்கை அறிவிப்பு
மேலும், பிராந்தியம் முழுவதும் பொதுமக்கள் சார்ந்த உட்கட்டமைப்புகள் மற்றும் அமெரிக்க இராணுவ உட்கட்டமைப்புகள் மீது ஈரான் உள்ளிட்ட தரப்பினரால் தாக்குதல்களும் பதில் தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் உள்ள அல்லது அப்பிராந்தியத்தின் ஊடாகப் பயணிக்கத் திட்டமிடும் பிரித்தானியப் பிரஜைகள், விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்படுதல், வான்வெளிகள் மூடப்படுதல் மற்றும் பயணங்களில் இடையூறுகள் ஏற்படுதல் போன்ற சூழ்நிலைகளுக்குத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுதல், செய்திகளைத் தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் பயண எச்சரிக்கை அறிவிப்புகளைப் பெறப் பதிவு செய்துகொள்ளுதல் ஆகியவற்றை பிரித்தானிய வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் (FCDO) வலியுறுத்தியுள்ளது.
மேலும், விமான நிலையங்கள் மற்றும் வான்வெளி தொடர்பான அறிவிப்புகளைத் தொடர்ந்து சரிபார்க்குமாறும், குறுகிய அறிவித்தல் காலத்திலேயே வான்வெளிகள் மூடப்படக்கூடும் என்பதால் பயணத் திட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் இராணுவ வசதிகள் அமைந்துள்ள பகுதிகளைத் தவிர்த்து, புறப்படும் பயணத் திட்டங்கள் தொடர்பில் தொடர்ந்து கவனம் செலுத்துமாறும் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |