இம்ரான்கானை விடுவிக்க ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அழுத்தம்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுவிக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க் அழைப்பு விடுத்துள்ளார்.
இம்ரான் கானுக்கு முறையான மருத்துவ சிகிச்சையும் மனிதாபிமான உதவிகளும் கிடைப்பதை உறுதி செய்யவும், அவரது தடுப்புக்காவல் காரணமாக நாட்டில் ஏற்படும் அரசியல் அமைதியின்மையைத் தணிக்கவும் பாகிஸ்தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
பல்வேறு வழக்கு
இம்ரான் கானும் அவரது மனைவி புஷ்ரா பீபியும் தற்போது ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சவூதி அரேபியாவிற்கு மேற்கொண்ட அதிகாரபூர்வ பயணத்தின் போது, சவூதி பட்டத்து இளவரசரால் பரிசளிக்கப்பட்ட பல்கேரி நகை செட்டை சட்டவிரோதமாக வைத்திருந்ததற்காக, இந்தத் தம்பதியினருக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஓகஸ்ட் 2023 முதல் காவலில் உள்ள இம்ரான் கான், 190 மில்லியன் பவுண்ட் ஊழல் வழக்கிலும் சிறைத்தண்டனை பெற்றுள்ளார். மேலும், அதே ஆண்டு மே 9 அன்று நடந்த போராட்டங்கள் தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பல வழக்குகளையும் அவர் எதிர்கொள்கிறார்.
உடனடி விடுதலை முக்கியமானது
சிஎன்என்-க்கு அளித்த பேட்டியில், நிலைமையைத் தணிப்பதற்காக அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே நம்பிக்கையை வளர்க்கும் ஒரு நடவடிக்கையாக இம்ரான் கானின் உடனடி விடுதலை முக்கியமானது என்று வோல்கர் டர்க் வலியுறுத்தினார்.

அவரது குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்க அனுமதிப்பதும், அவர்கள் சட்ட உதவியை நாட அனுமதிப்பதும், அவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையை வழங்குவதும் அவசியம் என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.
எதிர்க்கட்சி அரசியல் உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களின் தன்னிச்சையான தடுப்புக்காவல் குறித்தும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
எனவே, தடுப்புக்காவல்கள் தொடர்பான சர்வதேச சட்டத் தரநிலைகளுக்கு இணங்குமாறு பாகிஸ்தான் அதிகாரிகளை வோல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |