இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் விவகாரம்: ஐ.நா மனித உரிமைகள் இயக்குநர் எடுத்த அதிரடி முடிவு
இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதல் தொடர்பாக நியூயார்க்கில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தின் இயக்குநர் கிரேக் மொகிபேர் பதவி விலகியுள்ளார்.
தொடர்ந்து 26 நாட்களாக நடந்து வரும் இஸ்ரேல் - ஹமாஸ் தாக்குதலினால் காசாவில் இன அழிப்பு நடப்பதாகவும் அதனைத் தடுக்க ஐ.நா. தவறிவிட்டதாகவும் எனக் கூறியே பதவி விலகியுள்ளார்.
பதவி விலகல் தொடர்பாக ஒக்டோபர் 28ல், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் உயர் ஆணையருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்திலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
இன அழிப்பைத் தடுக்க
குறித்த கடிதத்தில்,
"காசாவில் இஸ்ரேல் நடத்தும் இன அழிப்பைத் தடுக்க ஐ.நா. தவறிவிட்டது. அங்கே அப்பாவி பலஸ்தீனியர்கள் கொல்லப்படுகின்றனர்.
இந்தத் தாக்குதலை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவின் பல நாடுகள் ஆதரித்து வருகின்றன.
மோசமான தாக்குதலை அவை இணைந்து அரங்கேற்றுகின்றன. அதைத் தடுக்க முடியாத ஐ.நா.வில் இருந்து நான் விலகுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இஸ்ரேல் - ஹமாஸ் தாக்குதலில் இதுவரையில் 9000 ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் 20,000 அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.