இனவெறி செயற்பாடுகளுக்கான முடிவு: ஐ.நா பிரதிநிதி வழங்கிய ஆலோசனை
இலங்கையில் மனித உரிமைகளைப் பாதிக்கும் இனவெறி செயற்பாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை மீள் உறுதிப்படுத்துவோம் என ஐ.நாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இனவெறி, இன ரீதியான ஒடுக்குமுறைகள், வெறுப்பு மற்றும் சகிப்புத்தன்மையின்மை ஆகியவற்றை இல்லாதொழித்தல் தொடர்பில் இலங்கை சார்பில் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுகையிலேயே மொஹான் பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
இனவெறியையும், ஒடுக்குமுறைகளையும் முடிவுக்குக் கொண்டு வருவதில் கல்வியும், மக்கள் மத்தியிலான விழிப்புணர்வும் மிக முக்கிய பங்கு வகிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இனவாதமற்ற
இந்த நடவடிக்கைக்கு தனிநபர்கள், சமூகங்கள், அரசாங்கங்கள் மற்றும் ஏனைய கட்டமைப்புக்கள் உள்ளிட்ட சகல தரப்பினரதும் கூட்டிணைந்த முயற்சி அத்தியாவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சகிப்புத்தன்மை மற்றும் கருணையை மேம்படுத்துவதும், கல்வியின் மூலமான புரிந்துணர்வை வளர்த்துக் கொள்வதும் முன்கற்பிதங்களையும் தவறான கருத்தியல்களையும் சவாலுக்கு உட்படுத்துவதற்கு உதவும் என மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வியியல் கட்டமைப்புக்களில் இனவாதமற்ற பாடத்திட்டங்களின் மூலமும், கருத்தாடல் மற்றும் புரிதலுக்கு ஏதுவான பாதுகாப்பான சூழலை உருவாக்குவதன் மூலமும் இவற்றைத் தோற்கடிக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை
தனிநபர்களின் சமத்துவ உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு சட்டங்களும், கொள்கைகளும் இன்றியமையாத பங்காற்றுவதாக சுட்டிக்காட்டிய மொஹான் பீரிஸ் ஒடுக்கு முறைகளைத் தடுக்கக் கூடியதும், பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதி கோரக்கூடியதுமான சட்டங்களை அரசாங்கம் உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்காவின் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகளின் பிரகாரம், இனம், மதம், மொழி, சாதி, பால், அரசியல் நிலைப்பாடு, பிறந்த இடம் உள்ளிட்ட புறக்காரணிகளின் அடிப்படையில் எந்தவொரு பிரஜையும் ஒடுக்கப்படக்கூடாது என்ற விடயம் மீள உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்துப் பிரஜைகளும் அவர்கள் வாழும் சமூகத்தின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கக்கூடிய உரிமையையும், இயலுமையையும் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல்லின, பன்மத, பல்கலாசார நாடான இலங்கை இதனை முன்னிறுத்தி அர்த்தமுள்ள நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும், இதற்கமைய கடந்த 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மும்மொழிக்கொள்கை நிறைவேற்றப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், அண்மையில் அரச சேவையில் உள்ள ஊழியர்கள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் பேசுவதை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மொஹான் பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        