விபத்துக்குள்ளான இலங்கையின் உலங்குவானூர்தி : பயங்கரவாதிகள் தொடர்பான வதந்தியை நிராகரித்த பாதுகாப்பு அமைச்சு
இலங்கையின் உலங்குவானூர்தியொன்று மத்திய ஆபிரிக்க குடியரசில் நேற்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இலங்கையர்கள் அல்-ஷபாப் எனும் பயங்கரவாதிகளால் பணயக்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.
அதேநேரம், இந்த விபத்து தொடர்பில் வெளியாகும் போலி செய்திகளை நம்ப வேண்டாமெனவும் அமைச்சு, பொது மக்களிடம் கோரியுள்ளது.
விபத்து
ஐ.நா அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இலங்கையின் உலங்குவானூர்தியொன்று தூசியுடன் கூடிய காலநிலை காரணமாக மத்திய ஆபிரிக்க குடியரசில் நேற்று விபத்துக்குள்ளாகியது.
இலங்கை நேரப்படி காலை 9.30 மணி அளவில் தரையிறங்கச் செல்லும் போது குறித்த உலங்குவானூர்தி விபத்துக்குள்ளாகியதாக விமானப்படை தெரிவித்தது.
பாதிப்பு
இந்த உலங்குவானூர்தியில் 5 விமானப்படை வீரர்கள் பயணித்ததாகவும், இதில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையென விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.
அத்துடன், விமானப்படைத் தளபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய, இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.
வதந்திகள்
இந்த நிலையில், குறித்த உலங்குவானூர்தியில் பயணித்த இலங்கையர்கள், அல்-ஷபாப் எனும் பயங்கரவாதிகளால் பணயக்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இதையடுத்து, இந்த விபத்து தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான புரிந்துணர்வை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாக பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
பொது மக்களிடம் கோரிக்கை
எனவே, இவ்வாறான போலி தகவல்களை நம்ப வேண்டாமென அமைச்சு பொது மக்களிடம் கோரியுள்ளது.
1/2
— Ministry of Defence - Sri Lanka (@LkDefence) January 13, 2024
Defence Ministry strongly refutes allegations that an SLAF crew was taken hostage by Al-Shabab group in Somalia. SLAF helicopter on Peacekeeping duties in Central African Republic made a crash landing due to adverse weather, and its 5-member crew are safe. pic.twitter.com/03RoRfdche
அத்துடன், இந்த விபத்து தொடர்பான மேலதிக தகவல்களுக்கு விமானப்படையின் ஊடகப்பேச்சாளரை அணுகுமாறும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |