சிறிலங்கா தொடர்பான முக்கிய ஆவணம் ஐ.நாவிடம் கைமாறியது
வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் 13 பக்கங்களைக் கொண்ட ஆவணமொன்றை ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கரிடம் கையளித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முக்கிய கூறுகளை செயல்படுத்தாமை குறித்த விமர்சனங்களை தவிர்க்கும் வகையிலான விளக்கங்களை உள்ளடக்கி இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், முதல் நாளிலேயே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சிறிலங்கா தொடர்பிலான தமது நிலைப்பாட்டினை வெளியிடவுள்ளார்.
இந்த நிலையில் வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஆவணமொன்றை ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கரிடம் கையளித்துள்ளார்.
உள்நாட்டு பொறிமுறைகளின் ஊடாக மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் இந்த ஆவணம் ஊடாக தெரிவித்துள்ளார்.
காணாமற்போனோர் அலுவலகம் உருவாக்கப்பட்டமை, நிலைமாறு நீதிக்கான திட்டத்தை உருக்குவதற்கான செயற்பாடு, பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்று சட்டத்தை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கி வௌிவிவகார அமைச்சர் இந்த ஆவணத்தை கையளித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.
முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்கியமை, இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்தியமை, இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த தனியார் காணிகளை விடுவித்தமை, சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட விடயங்களையும் உள்ளடக்கிய வகையில் இந்த ஆவணம் கையளிக்கப்பட்டுள்ளது.
தொற்றுநோய் அச்சுறுத்தல் காணப்பட்டபோதிலும், உள்நாட்டு பொறிமுறைகள் மற்றும் வழிமுறைகள் ஊடாக மனித உரிமைகள் பிரச்சினைகளில் கணிசமான முன்னேற்றமடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு தீர்வுகள் குறித்த செயற்பாடுகள் முடிவடையாத செயல்முறைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது, வெளியார் சாட்சி சேகரிப்பு பொறிமுறையை நிறுவுவதை சிறிலங்கா அரசாங்கம் நிராகரிப்பதாக குறித்த ஆவணத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நாட்டின் ஒப்புதல் மற்றும் ஒத்துழைப்பு இன்றி, வெளியார் சாட்சி சேகரிப்பு பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் மற்றும் செயற்பாடுகள் அரசியல்மயமாக்கலுக்கு உட்பட்டவை எனவும், அவைகள் ஊடாக மனித உரிமை நோக்கங்களை அடைய முடியாது என்பதை சர்வதேச சமூகம் நன்கு அறிந்திருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான பொறுப்புக்கூறல் விவகாரத்தில், முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் விசாரணை மற்றும் விசாரணைக்கான பரிந்துரைகளை அமுல்படுத்த சிறிலங்கா தயாராக உள்ளதாக 13 பக்கங்களைக் கொண்ட ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.