மறைத்து வைக்கப்பட்ட நிலையில் தொடர்ந்தும் கைப்பற்றப்படும் அரச வாகனங்கள்
அநுர குமார ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் தேவையற்ற வகையில் பயன்படுத்தப்பட்ட அரச வாகனங்கள் தற்போது அதிகளவில் கைப்பற்றப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நுவரெலியாவில்(nuwara eliya) உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டியொன்றை நுவரெலியா காவல்துறையினர் நேற்று (12) கைப்பற்றியிருந்தனர். முன்னாள் அமைச்சரவை அமைச்சர் ஒருவரின் உறவினரின் வீட்டில் ஜீப் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும், அது தொடர்பான சட்ட ஆவணங்கள் எதுவும் இல்லை எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கராஜ் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் மற்றும் கார்
இதேவேளை, பெல்மடுல்ல, பாதகட பிரதேசத்தில் உள்ள கராஜ் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் மற்றும் கார் ஆகியவற்றை பீளமேடு காவல்துறையினர் இன்று (13) கைப்பற்றியுள்ளனர்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவரின் நண்பர் ஒருவரினால் இந்த வாகனங்கள் கராஜுக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், காவல்துறை விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இரகசிய தகவலையடுத்து கைப்பற்றப்பட்ட சொகுசு ஜீப்
அத்துடன் 1997 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஓபநாயக்க பல்லேகந்த பாடசாலை வீதி கந்தேகெட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு ஜீப் வண்டியொன்றை ஓபநாயக்க காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
வாகனத்தின் இயந்திர இலக்கம் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |