வயிறு வலியென வைத்தியசாலைக்கு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
வயிற்று வலியினால் பாதிக்கப்பட்ட ஒருவரிற்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் போது நோயாளியின் அடிவயிற்றில் நம்ப முடியாத பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
35 வயதான குல்தீப் சிங், என்ற நபரிற்கே குறித்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் மொகவாலாவில் உள்ள வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்தியர்களே இந்த அறுவை சிகிச்சையினை மேற்கொண்டுள்ளனர்.
எக்ஸ்ரே (X -Ray) பரிசோதனை
இரண்டு நாட்களுக்கு மேலாக குமட்டல் மற்றும் வயிற்று வலியால் அவதியுற்றுள்ளார், அதன்போது காய்ச்சல் அதிகமாக இருந்ததால் குடும்பத்தினர் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
சிகிச்சை அளித்த போதும் அவர் தொடர்ந்தும் வயிற்று வலியினால் அவதியுற்றதை தொடர்ந்து மருத்துவர்கள் வயிற்றில் எக்ஸ்ரே (X -Ray) பரிசோதனை செய்ய தீர்மானித்து பரிசோதனை மேற்கொண்டனர்.
பரிசோதனை முடிவில், நோயாளியின் வயிற்றில் பல உலோகப் பொருள்கள் பதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் விரைந்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது, சுமார் மூன்று மணி நேரம் வரை நீடித்த அறுவை சிகிச்சையில் நோயாளியின் வயிற்றிலிருந்து அதிர்ச்சியூட்டும் பொருட்கள் அகற்றப்பட்டன.
வித்தியாசமான சம்பவம்
நோயாளியின் வயிற்றிலிருந்து இயர்போன்கள் (earphones), கம்பி துண்டுகள், பொத்தான்கள், தலைமுடி கிளிப்புகள், ராக்கி என பல பொருட்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தனது மருத்துவ அனுபவத்தில் தான் முதல்முறையாக எதிர்கொள்ளும் வித்தியாசமான சம்பவம் இதுதான் என்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் அஜ்மீர் கல்ரா தெரிவித்துள்ளார்.
உடலில் இருந்து அனைத்து பொருட்களையும் அகற்றிய பின்னரும் நோயாளியின் உடல்நிலை இன்னமும் சீராகவில்லை என்றும் வைத்தியர்கள் கூறுகின்றனர்.
இந்தப் பொருட்கள் நோயாளியின் வயிற்றில் நீண்ட காலமாக இருந்ததாகவும், இதனால் வேறு உடல்நலப் பிரச்சனைகள் உண்டாகியிருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்
இது குறித்து நோயாளியின் குடும்பத்தினர், அந்த நபர் இரண்டு ஆண்டுகளாக வயிற்று நோயால் அவதிப்பட்டு வருவதாகவும், அவர் எப்போது, எப்படி இவற்றையெல்லாம் உட்கொண்டார் என்பது யாருக்கும் தெரியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நோயாளி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இதற்கு முன்னர், அவர் பல வைத்தியர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவர்களில் யாராலும் அவரது வலிக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை என்றும் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 16 மணி நேரம் முன்
