இங்கிலாந்து அபார வெற்றி: சமப்படுத்தப்பட்ட இளையோர் ஒருநாள் கிரிக்கெட் தொடர்
19 வயதுக்குட்பட்ட இலங்கை (Sri Lanka) - இங்கிலாந்து (England) அணிகளுக்கு இடையில் நடைபெற்றுவரும் 3 போட்டிகள் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் சமப்படுத்தப்பட்டுள்ளது.
செல்ஸ்போர்டில் (Selsport) நடைபெற்ற முதலாவது இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 65 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கை, தொடரில் 1 - 0 என முன்னிலை பெற்றிருந்தது.
ஆனால், ஹோவ், கவுன்டி (County) மைதானத்தில் நேற்று (01) நடைபெற்ற 2 ஆவது பகலிரவு போட்டியில் 30 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இங்கிலாந்து தொடரை 1 - 1 என சம்படுத்தியுள்ளது.
இலங்கை வம்சாவளி
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 360 ஓட்டங்களைக் குவித்தது.
இங்கிலாந்து இளையோர் அணியில் இடம்பெறும் இலங்கை வம்சாவளி கேஷன பொன்சேகா 9 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த நிலையில் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ப்ரெடி மெக்கான் (Freddie McCann) 139 பந்துகளில் 22 பவுண்டறிகள், 3 சிக்ஸர்களுடன் 174 ஓட்டங்களைக் குவித்து அசத்தினார்.
அத்துடன் இரண்டு சிறந்த இணைப்பாட்டங்களிலும் அவர் பங்காற்றியிருந்தார்.
தீர்மானமிக்க மூன்றாவது போட்டி
பந்துவீச்சில் இலங்கை அணித் தலைவர் டினுர களுபஹன 81 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும் துமிந்து செவ்மின 91 ஒட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
361 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 330 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான தீர்மானம் மிக்க கடைசி இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இதே மைதானத்தில் நாளை(03) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |