கொழும்பு வர்த்தகர்களை ஆட்டிப்படைத்த குற்றவாளி துபாயில் கைது!
"பஸ் லலித்" என்றும் அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினர் லலித் கன்னங்கர துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் இலங்கையில் துப்பாக்கிச் சூடு, போதைப்பொருள் கடத்தல், கப்பம் வாங்குதல் உள்ளிட்ட பல குற்றங்களை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், 34 வயதான சந்தேகநபர் 5 கொலைகளுக்காக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தார்.
முஸ்லிம் வர்த்தகரின் படுகொலை
சந்தேகநபரால் 2022 ஆம் ஆண்டு கழுதை முகமூடியைப் பயன்படுத்தி ஹங்வெல்ல பிரதேசத்தில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை சமூகத்தில் தீவிரமான விவாதத்திற்கு உள்ளானது.
அதற்குக் காரணம், குறித்த வர்த்தகர் கப்பம் கோரி வழங்கப்படாமையே என்பது தெரியவந்தது.
அத்துடன், கடந்த ஆண்டு(2024) செப்டெம்பர் 30ஆம் திகதி ஹங்வெல்ல நெலுவத்துடுவ பிரதேசத்தில் வசித்து வந்த வர்த்தகர் ஒருவர் கொல்லப்பட்டமையும் பெரிதும் பேசப்பட்டது.
லலித் கன்னங்கரவுக்கு முதலில் பஸ் வேலை வாய்ப்பை வழங்கிய குறித்த நபரிடமே, கப்பம் கோரி அதனை வழங்காத காரணத்தினால் கொல்லப்பட்டுள்ளார்.
அதிச்சியூட்டும் குரல் பதிவுகள்
மேலும், சந்தேகநபர் பல வர்த்தகர்களிடம் கப்பம் கோரி மிரட்டியதுடன், அவர்களை மிரட்டும் குரல் பதிவுகளும் ஊடகங்களில் வௌியாகி இருந்தன.
இதேவேளை, இந்த சந்தேகநபர் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மாறுவேடத்தில் இலங்கைக்கு வந்து சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மரணமடைந்த தனது தாயாரின் இறுதிக் கிரியைகள் நடத்தப்பட்டபோது, சந்தேகநபர் இவ்வாறு நாட்டிற்கு வந்து சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்போது, சந்தேகநபரான பஸ் லலித், துபாயில் இருந்து இந்தியா வழியாக மாறுவேடத்தில் இலங்கை வந்து ஒரே நாளில் அதே வழியில் புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
