சாத்வீக வழியில் போராடும் அம்பிகைக்கு உலகத்தமிழ் மக்கள் ஆதரவளிக்க அழைப்பு
எமது உரிமைக்காக தன்னைத் தானே வருத்தி சாத்வீக வழியில் போராடும் அம்பிகையின் போராட்டத்துக்கு உலகத் தமிழ் மக்கள் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தும் ஒரு தீர்மானத்தை பிரித்தானியா ஐ.நா மனித உரிமைகள் சபை அமர்வில் முன்வைக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து லண்டனில் இன்று சனிக்கிழமை சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ள திருமதி அம்பிகை செல்வகுமார் அவர்களின் போராட்டம் வெற்றி பெறவேண்டுமென எனது ஆசிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
தற்போது ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமை பேரவையில் மீண்டும் இல்கைக்கு கால அவகாசத்தை வழங்கி உள்ளக பொறிமுறை ஒன்றுக்கான வாய்ப்பை வழங்கி தமிழ் மக்களின் நீதியை முழுமையாக நீர்த்துப் போகச் செய்யும் ஒரு நடவடிக்கையே பிர்த்தானியா தற்போது சமர்ப்பிக்கும் தீர்மான வரைபு என்ற அம்பிகையின் நியாயமான கவலையையும் ஆதங்கத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
இலங்கையை சர்வதேசத்துக்கு பாரப்படுத்தும் பொறுப்பை ஐ.நா பொதச் சபைக்கும் பாதுகாப்பு சபைக்கும் வழங்கும் வகையிலான தீர்மானத்தையும் இனப்படுகொலை,போர்க்குற்றம்,மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றம் ஆகியவை தொடர்பில் சர்வதேச,சுயாதீன விசாரணை பொறிமுறை ஒன்றையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே நிலம்,புலத்தில் வாழும் ஒட்டு மொத்த தமிழ் மக்களினதும் கோரிக்கை ஆகும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அம்பிகை மேற்கொள்ளும் உண்ணாவிரத போராட்டத்துக்கு பிரித்தானியா செவிமடுக்க வேண்டும் என்பது எங்ள் எல்லோரதும் எதிர்பார்ப்பாகும்.
எமது உரிமைக்காக தன்னைத் தானே வருத்தி சாத்வீக வழியில் போராடும் அம்பிகையின் போராட்டத்துக்கு உலகத் தமிழ் மக்கள் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றேன்.
அம்பிகை தனது போராட்டத்தில் வெற்றிபெற்று தொடர்ந்தும் எமது மக்களின் உரிமைகளுக்காக போராட எல்லாம் வல்ல அன்னை பராசக்தி ஆசீர்வதிப்பாராக என்றுள்ளது.