தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு - முக்கிய கலந்துரையாடலில் பிரிட்டன் அமைச்சர்கள்
ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இருந்து வருகைதரும் பயணிகள், இரண்டு கட்ட தடுப்பூசி மருந்துகளையும் பெற்றிருப்பின், அவர்களை தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் இன்றி இங்கிலாந்துக்குள் அனுமதிப்பது குறித்து சிரேஷ்ட அமைச்சர்கள் கலந்துரையாடவுள்ளனர்.
கொவிட் நடவடிக்கைகள் தொடர்பில் இன்று நடைபெறும் சந்திப்பில் இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்படும் சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு பயணம் செய்யும் பிரித்தானியப் பிரஜைகள், இரண்டு கட்ட தடுப்பூசி மருந்துகளையும் பெற்றுக்கொண்டிருப்பின் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்களிக்கப்பட்டுவருகின்றது. எனினும் ஆபத்துள்ள நாடுகளில் இருந்து வருகைதரும் சர்வதேச பயணிகள், இரண்டு கட்ட தடுப்பூசி மருந்துகளையும் பெற்றுக்கொண்டிருந்தாலும் பிரித்தானியாவிற்குள் பிரவேசிக்கும் போது கட்டாயம் தனிமைப்படுத்தல் நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து வருகைதரும், இரண்டு கட்ட தடுப்பூசி மருந்துகளையும் பெற்றவர்களை தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் இன்றி, நாட்டிற்குள் அனுமதிப்பது குறித்து பிரித்தானியா கவனம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் பத்திரிகையொன்றில் வெளியான இந்த செய்தி குறித்து கருத்து தெரிவிப்பதற்கு பிரித்தானியப் பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.
எனினும் விமான பயண நிறுவனங்கள், இதற்கான அழுத்தங்களை பிரித்தானிய அரசாங்கத்திற்கு வழங்கிவருவதாக தெரிவிக்கப்படும் நிலையில், அது குறித்து இன்று கலந்தாலோசிக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் விடுமுறைகளை செலவிடுவதற்கும் அன்புக்குரியவர்களை பார்வையிடுவதற்கும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவில் இருந்து மக்கள் அதிகளவில் வருகைதருவார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஜேர்மன், ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை பிரித்தானியா தனது ஆபத்தான பட்டியலில் தொடர்ந்தும் பேணி வருகின்றது