விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை- ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு!
ஜெனீவாவில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரிலும் அதேபோல இத்தாலியில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாடொன்றிலும் ஸ்ரீலங்கா மீதான போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் தயாராகி வருகின்றது.
அதேபோல, தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை தொடர்ந்தும் நீடிப்பதற்கு எடுத்த தீர்மானத்திற்கு பிரித்தானிய அரசாங்கத்திற்கு நன்றி கூறுவதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரும் நடக்கவுள்ளது. அதற்கு ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சராக நான் பங்கேற்கவுள்ளேன். இணையவழி ஊடாக இதில் கலந்துகொள்வேன். கடந்த மார்ச் மாதத்தில் இந்த அமர்வு நடந்தது. கடந்த 06 மாதங்களாக பெரும் சிரமங்கள் ஏற்பட்டன.
கொவிட் நெருக்கடிக்கு மத்தியிலும் எமது நாட்டின் பல்வேறு துறைகளிலும் ஏற்பட்ட விருத்திகள் பற்றிய யதார்த்தமான கருத்ததை நான் குறித்த பேரவையில் சமர்பிக்கவுள்ளேன். அதேபோல இத்தாலியில் அடுத்தவாரம் நடைபெறவுள்ள ஐரோப்பிய மாநாடொன்றில் ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ச பங்கேற்கவுள்ளார்.
இந்த இரண்டு சர்வதேச மாநாடுகளிலும் ஸ்ரீலங்கா மீதான குற்றச்சாட்டுக்களை நிவர்த்தி செய்து தெளிவுபடுத்த சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொள்வோம். அதேவேளை சர்வதேச ரீதியில் தீவிரவாதம் மற்றும் அதன் தாக்கம் என்பது தெளிவான அறிவை அனைத்து நாடுகளும் அறிந்துள்ளன.
தீவிரவாத செயற்பாட்டினால் தென்னாசிய நாடுகள் மட்டுமன்றி உலக நாடுகளையும் அழுத்தத்திற்கு இட்டுச்சென்றுள்ளன. அண்மையில் நியூஸிலாந்தில் நடந்த கவலைக்குரிய சம்பவம் இதற்கு உதாரணமாகும். இதுபற்றி ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய எமது அனைத்து புலனாய்வுப் பிரிவும் நியூஸிலாந்தினால் நடத்தப்படுகின்ற விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மீது பிரித்தானியாவினால் விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவு நீடிக்கப்பட்டமையிட்டு நாங்கள் நன்றி கூறுகின்றோம். தொடர்ச்சியாக அந்த தடையை நீக்கும்படி பல சக்திகள் கோரிக்கை விடுத்துவந்த போதிலும் பிரித்தானிய நீதிமன்றம் அந்தக் கோரிக்கையை நிராகரித்து வருகின்றது.
போர் முடிந்த போதிலும் அரசியல் ரீதியிலான செயற்பாடு காரணமாக நாடுகளின் ஸ்திரத்தன்மைக்கு பாரிய சவால் ஏற்பட்டுள்ள காரணமாகவே பிரித்தானியா இந்த தீர்மானத்தை எடுத்திருக்கின்றது என நினைக்கின்றோம். இந்த முடிவானது ஏனைய நாடுகளுக்கும் மிகச்சிறந்த உதாரணமாகும் எனவும் தெரிவித்து்ளார்.