பல்கலை மாணவனின் திடீர் மரணம்: கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு
சப்ரகமுவ பல்கலைக்கழக (Sabaragamuwa University of Sri Lanka) மாணவன் சரித் தில்ஷான் பகிடி வதையால் உயிரிழந்ததாக தெரியவந்தால், அதற்குப் பொறுப்பான அனைத்து தரப்பினருக்கும் எடுக்க கூடிய அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு (MINISTRY OF EDUCATION, HIGHER EDUCATION AND VOCATIONAL EDUCATION) தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'இந்த திடீர் மரணம் கூட்டுப் பகிடி வதையால் ஏற்பட்டதாக பல்வேறு சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களை அமைச்சு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
அதிகபட்ச சட்ட நடவடிக்கை
சரித் தில்ஷான் பகிடி வதையால் உயிரிழந்ததாக கண்டுபிடிக்கப்பட்டால், தற்போதுள்ள சட்டத்தின்படி பொறுப்பான அனைத்து தரப்பினருக்கும் எதிராக அமைச்சு அதிகபட்ச நடவடிக்கை எடுக்கும்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறி பல்வேறு நபர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தும் சமூக ஊடகத் தகவல்கள் குறித்தும் அமைச்சு தனது கவனத்தை செலுத்தியுள்ளது.
முழுமையான விசாரணை
மேலும் தற்போது காவல்துறை விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பான சரியான தகவல்களை வெளிப்படுத்தும் வரை, பல நபர்களின் தனியுரிமையைப் பாதிக்கக்கூடிய போலி தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்த விசாரணைக் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் மரணம் குறித்து உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
