நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை : மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கையில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடரும் நிலையில் 06 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதுளை, ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேசங்களுக்கும் கண்டி மாவட்டத்தின் தும்பனே பிரதேசத்துக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, பலாங்கொடை, குருவிட்ட உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் செம்மஞ்சள் நிறத்திலான மண்சரிவுக்கான இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாய எச்சரிக்கை
இதேவேளை ஹம்பாந்தோட்டை, கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலுள்ள பல பகுதிகளுக்கு மஞ்சள் நிறத்திலான முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் மழை தொடரும் நிலையில் மண்மேடுகள், பாறைகள் சரிந்து விழுதல், நிலம் தாழிறக்கம் போன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் அப்பகுதியிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
இதேவேளை, நாட்டிலுள்ள 18 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்து வான்பாயும் நிலைமை ஏற்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு அபாயம் காணப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வான்பாயும் அபாயம்
இதேவேளை, மழையுடனான காலநிலை தொடரும் நிலையில் தெதுருஓயா, இராஜாங்கனை, யான்ஓயா, வேஹெரகல உள்ளிட்ட 18 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில் வான்பாயும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் சுதர்ஷனி விதானபத்திரன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விரைவில் 73 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயரும் நிலையிலுள் காணப்படுவதுடன் நாடு பூராகவுமுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 50 வீதம் அதிகரித்துள்ளதாகவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 5 மணி நேரம் முன்