கொழும்பு துறைமுக நகரத்தை அபிவிருத்திக்கு பெரும்தொகையை ஒதுக்கியுள்ள சீனா
கொழும்பு துறைமுக நகரத்தை அபிவிருத்தி செய்வதில் முக்கிய பங்காளிகளாக இருக்கும் சீனா 1.565 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தம் ஒன்றை உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு துறைமுக நகரத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்தியை முன்னெடுப்பதற்காக இந்த ஒப்பந்தம் பேச்சாகியுள்ளதாக கொழும்பு துறைமுக நகரம் அறிவித்துள்ளது.
இந்த இரண்டாம் கட்ட அபிவிருத்தியில் மெரினா திட்டம், மெரினா உணவகம் மற்றும் கொழும்பு சர்வதேச நிதி மையத் திட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருப்பதாக கொழும்பு துறைமுக நகரம் தெரிவித்துள்ளது.
முதலீட்டு வாய்ப்புகள்
இதேவேளை, கொழும்பு துறைமுக நகரத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் இன்று (19) அதிபர் ரணில் விக்கிரமசிங்க சீனாவில் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் இது தொடர்பில் இன்று (19) சீனாவில் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கலந்துரையாடலில் துறைமுக நகரத்தை சர்வதேச நிதி மையமாக அபிவிருத்தி செய்தல், துறைமுக நகரத்திற்கு பிரத்தியேகமான புதிய நிதி ஒழுங்குமுறைகளை உருவாக்குதல் மற்றும் துறைமுக நகரத்திற்கு பிரத்தியேகமாக பொருந்தக்கூடிய நீதித்துறை மற்றும் நடுவர் பொறிமுறைகளை ஸ்தாபித்தல் உள்ளிட்ட முக்கிய கேந்திர புள்ளிகள்போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சீனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேஷன் (China Communication Construction Coorporation), சினோபெக் (Sinopec) மற்றும் BYD கம்பெனி உட்பட பல முக்கிய சீன நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனும் அதிபர் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இந்த கலந்துரையாடல்கள் மூலம் இலங்கைக்கான வருங்கால முதலீட்டு வாய்ப்புகள் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.