வடமாகாண ஆளுநரைச் சந்தித்தார் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்!
இலங்கைக்கான அமெரிக்க தூதுவரான ஜூலி சங் (Julie Chung) யாழிற்கு விஜயம் மேற்கொண்டு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை (BSM Charles) சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பானது வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்றைய தினம் (17) இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது, வடக்கு மாகாண அபிவிருத்தி செயற்பாடுகள், கல்வி, சுற்றுலாத்துறை, காணி விடுவிப்பு, தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகள், தொழில் வாய்ப்புகள் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணி விடுவிப்பு
அத்துடன், இதன்போது காணி விடுவிப்பு மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள காணிகளுக்குள் மக்கள் பிரவேசிப்பதற்கான வசதிகள் தொடர்பிலும் அமெரிக்க தூதுவர் ஆளுநரிடம் கேட்டறிந்துகொண்டதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், வடக்கில் காணப்படும் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்ககூடிய கண்காட்சி செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரிடம் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
தேவையான ஒத்துழைப்பு
இதேவேளை வடக்கிற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்க தயாராக உள்ளதாகவும், மாணவர்களுக்கு இலவச ஆங்கில மொழி வகுப்புக்களை ஆரம்பிக்க உள்ளதாகவும் மற்றும் அதற்கான ஒத்துழைப்புகளை ஆளுநரிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 27 வருடங்களின் பின்னர் அமெரிக்க அமைதி காக்கும் கழகத்தின் ஊடாக இலங்கையில் இலவச ஆங்கில மொழி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |