பெசெஷ்கியானின் குழுவினருக்கு விசா மறுத்த அமெரிக்கா! ஐ.நா. கூட்டத்தொடரில் புதிய சர்ச்சை
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இந்த வாரம் அமெரிக்கா செல்லவுள்ள ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானின் பிரதிநிதிக் குழுவில் இடம்பெற்றுள்ள சிலருக்கு, அமெரிக்கா விசா வழங்க மறுத்துள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக அவரது தகவல் தொடர்புக் குழுவினர் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகளுக்கே இவ்வாறு விசா மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெப்ரவரியில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து மத்திய கிழக்கு போர் தொடங்கிய பின்னர், அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் மிக உயர்மட்ட ஈரானிய அதிகாரியாக பெசெஷ்கியான் காணப்படுகிறார்.
விசா மறுப்பு
இந்த நிலையிலேயே “அமெரிக்க அரசின் முன்னெப்போதும் இல்லாத விரோத நடவடிக்கையாக, ஜனாதிபதியின் உயர்மட்ட பிரதிநிதிக் குழுவில் இடம்பெற்றுள்ள சிலருக்கு, குறிப்பாக அவரது தகவல் தொடர்புக் குழுவினருக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விசா மறுத்துள்ளார்” என்று ஈரானின் அரசு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், பெசெஷ்கியான் புதன்கிழமை ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றுவார் என்றும் தெரிவித்துள்ளது.
அத்தோடு, ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் இஸ்மாயில் பகாயி, ட்ரம்ப் நிர்வாகம் “தகவல்களை அணுகுவதற்கான உரிமையை மிதித்து வருகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தொடர்
அமெரிக்காவின் மூன்று முக்கிய ஊடக நிறுவனங்களை அவற்றின் செய்தி வெளியீடுகள் தொடர்பான எதிர்ப்பைத் தொடர்ந்து வெள்ளை மாளிகைக்குள் நுழைய சமீபத்தில் தடை விதிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஈரானிய பிரதிநிதிக் குழு அமெரிக்கா வருவதற்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அந்தக் குழுவினருக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |