2022 இல் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் அமெரிக்கர் - அவர் செய்த குற்றம் தான் என்ன?
காதலியை பிணையில் எடுக்க திருடிய போது இருவரை கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக இனம் காணப்பட்ட அமெரிக்கர் ஒருவருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
2022ம் ஆண்டில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் முதல் நபராக அவர் திகழ்கிறார். 46 வயதாகும் டொனால்ட் கிராண்ட் என்பவருக்கே விஷ ஊசி செலுத்தி இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
2005ம் ஆண்டு இவருக்கு மரண தண்டனை என தீர்ப்பளிக்கப்பட்டது. பல்வேறு முறை தண்டனையில் இருந்து தப்ப மறுசீராய்வு மனு செய்திருந்த நிலையில் அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. கடைசியாக துப்பாக்கியால் சுட்டு தனக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என அவரது கோரிக்கையை அமெரிக்க உச்சநீதிமன்றம் கடந்த புதனன்று நிராகரித்தது.
2001ம் ஆண்டு டொனால்ட் கிராண்ட் (அப்போது 25 வயது) சிறையில் இருக்கும் தனது காதலியை பிணையில் விடுவிக்க ஹோட்டல் ஒன்றில் புகுந்து திருடியுள்ளார். அப்போது அவரை எதிர்த்த ஹோட்டல் ஊழியர்களில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டும், மற்றொருவரை கத்தியால் குத்தியும் அவர் படுகொலை செய்தார்.
இந்த குற்றத்திற்காக விஷ ஊசி செலுத்தப்பட்டு டொனால்ட் கிராண்ட்க்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் போது, பாதிக்கப்பட்டவர்கள், செய்தியாளர்கள், டொனால்ட் கிராண்ட் உறவினர்கள் போன்றோர் அங்கு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
