வியப்பில் சர்வதேசம்! ஈரான் எண்ணெய் மீதான தடைகளை நீக்கிய அமெரிக்கா
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, ஈரானிய எண்ணெய் மீதான தடைகளை 30 நாட்களுக்கு நீக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே அனுப்பப்பட்ட எண்ணெய்க்கு மட்டுமே இது பொருந்தும் என்றும், புதிய ஆர்டர்களுக்கு அல்ல என்றும் அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசண்ட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்தத் தடைகள் 30 நாட்களுக்கு மட்டுமே நீக்கப்படும் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
ஈரானுக்கு எதிர்பாரா நன்மை
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகத் தொடுத்த போரினால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, ஈரானிய எண்ணெய் மீதான தடைகளை நீக்குவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் நேற்று (20) செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த முடிவு செயல்படுத்தப்பட்டால், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நீண்டகாலக் கொள்கையில் இது ஒரு வியத்தகு மாற்றத்தைக் குறிக்கும் என்றும், ஈரான் பல எதிர்பாராத நன்மைகளைப் பெறும் என்றும் அந்த அறிக்கைகள் சுட்டிக்காட்டின.
எரிபொருள் விலைகள்
ஈரான் மீது விதிக்கப்பட்ட இந்தத் தடைகளால், சீனா ஈரானிய எண்ணெயை பெரும் தள்ளுபடியில் பெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, ஈரானிய எண்ணெய் மீது விதிக்கப்பட்டிருந்த விற்பனைக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால், 10 முதல் 14 நாட்களுக்குள் உலக கச்சா எண்ணெய் விலைகள் கணிசமாகக் குறையும் என்று அமெரிக்கா மதிப்பிட்டுள்ளது.
மேலும், அமெரிக்கா சமீபத்தில் ரஷ்ய எண்ணெய் மீது விதிக்கப்பட்டிருந்த பல தடைகளையும் நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.