சிறிலங்கா இராணுவ தரப்புக்கு அமெரிக்கா அதிர்ச்சி வைத்தியம்!!
சிறிலங்கா இராணுவ அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் உதய பெரேராவை போர்க்குற்றச் சந்தேக நபராக அமெரிக்கா பெயரிட்டுள்ளது.
சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் முக்கிய உறுப்பினராக அறியப்படும் மேஜர் ஜெனரல் பெரேரா, ஓகஸ்ட் 2019 இல் வழங்கப்பட்ட ஐந்தாண்டு பல்நுழைவு அனுமதி விசாவைப் பெற்றிருந்த நிலையில், அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கொழும்பின் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேஜர் ஜெனரல் பெரேரா தனது மனைவி மற்றும் அவரது புதல்வருடன், டிசம்பர் 5ஆம் திகதி இரவு, சிங்கப்பூர் நோக்கி பயணிப்பதற்காக பண்டாரநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு பிரிவுக்கு சென்ற நிலையில், அமெரிக்காவின் தீர்மானம் குறித்து அவருக்குத் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேஜர் ஜெனரல் உதய பெரேரா 2004 இல் சிறிலங்கா தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் 2012 இல் ஐக்கிய அமெரிக்க இராணுவ போர் பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றில் இராணுவப் பாடநெறிகளை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளதோடு, அடிக்கடி விமானப் பயணங்களை மேற்கொள்பவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் உள்ள சிங்கப்பூர் விமான சேவை ஊழியர்கள், அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து தமக்கு கிடைத்த எச்சரிக்கை தகவலை அவரிடம் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரில் இருந்து பெரேரா உள்ளிட்ட குடும்பத்தினர் லொஸ் ஏஞ்சல்ஸ் செல்லத் திட்டமிருந்தனர். எவ்வாறெனினும், பெரேராவின் மனைவியும் புதல்வரும் பயணத்தை தொடர்ந்துள்ளனர்.
மேஜர் ஜெனரல் பெரேராவும், அவரது மனைவியும் கலிபோர்னியாவில் பிறந்த அவர்களது முதல் பேரப்பிள்ளையை பார்வையிட திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
2017 இல் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பெரேரா, இரண்டு வருடண்டுகளுக்குப் பின்னர் பல் நுழைவு விசாவைப் பெற்றிருந்த நிலையில், அமெரிக்க நடவடிக்கையின் பின்னணியில் உள்ள நியாயம் தொடர்பில் அவர் கேள்வி எழுப்பப்பட்டுள்ளார்.
பல் நுழைவு விசா வழங்கப்பட்டு மூன்று வருடங்களுக்குப் பின்னர் அமெரிக்க நடவடிக்கையைத் தூண்டியது எது என்பது தெளிவாகத் தெரியவில்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.