ஐ.நா பணியாளர்கள் மீது குற்றச்சாட்டு : நிதியுதவியை நிறுத்திய அமெரிக்கா
பலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் முகமை தனது பணியாளர்களில் 12பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலின் மீதான ஹமாஸின் தாக்குதலில் அவர்கள் பங்குவகித்ததாக எழுப்பப்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பலஸ்தீன அகதிகளுக்கான முகமை, காசாவில் மனிதநேய உதவிகளை அளிப்பதில் முதன்மை வகிக்கின்றது. 13ஆயிரம் பேர் இந்த முகமையில் பணியாற்றுகிறார்கள்.
இஸ்ரேல் குற்றச்சாட்டு
மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உதவி பணியாளர்கள் என பல்வேறு பணிநிலைகளில் பணியாற்றுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் பலஸ்தீனர்கள்.
முன்னதாக ஐ.நாவின் பாடசாலைகளில் இஸ்ரேலுக்கு எதிரான கருத்துகள் பயிற்றுவிக்கப்படுவதாகவும் அதன் பணியாளர்கள் ஹமாஸுடன் இணைந்து செயற்படுவதாகவும் இஸ்ரேல் குற்றச்சாட்டை முன்வைத்தது.
இந்த நிலையில், ஐ.நா சிலரைப் பணிநீக்கம் செய்துள்ளதாக தெரிவித்தபோதும் மேலதிக விபரங்களை வெளியிடவில்லை.
முகமையின் தலைவர் பிலிப் லாஸரினி
தனது பணியாளர்கள் மீதான குற்றச்சாட்டு அதிர்ச்சியளிப்பதாகவும் பயங்கரவாத செயலில் ஈடுப்பட்டிருந்தால் அதற்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் முகமையின் தலைவர் பிலிப் லாஸரினி தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அமெரிக்கா இந்த முகமைக்கான நிதியை நிறுத்தியுள்ளது. மிகப்பெரிய நிதி உதவியாளரான அமெரிக்கா 2022இல் ஒட்டுமொத்தமாக 34 கோடி அமெரிக்க டொலர் அளவுக்கு நிதியுதவி செய்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |