ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு! ரஷ்யா கடும் எச்சரிக்கை
ஈரானியத் துறைமுகங்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள கடல்சார் முற்றுகை நடவடிக்கைக்கு ரஷ்யா கடுமையாக எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இந்த முற்றுகையானது சர்வதேச சந்தைகளில் பாரிய எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ள கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இது குறித்த மேலதிக விபரங்கள் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை எனத் தற்போதைக்குக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அந்நாட்டின் யுரேனியத்தை ரஷ்யா ஏற்றுக்கொள்வதற்கு முன்வந்த போதிலும் அந்தத் திட்டம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும், எனினும் இப்பிரச்சினையைத் தீர்க்க உதவிகளை வழங்கத் தாம் இன்னும் தயாராக இருப்பதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.
மத்தியஸ்தராக ரஷ்யா
இதேவேளை, போரின் பின்னணியில் அமெரிக்கப் படைகளின் நகர்வுகள் குறித்த உளவுத் தகவல்களையும், உக்ரைன் போரில் பயன்படுத்தப்பட்ட நவீன ட்ரோன் போர் நுட்பங்களையும் ஈரானுக்கு ரஷ்யா வழங்கி வருவதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகளை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான ஒரு சிக்கலான சூழலிலும், வளைகுடா நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனைகளை நடத்தி வரும் ஜனாதிபதி விளாடிமிர் புடின், இந்தப் போர் பதற்றத்தைத் தணிக்க ஒரு மத்தியஸ்தராக செயற்பட ரஷ்யா முன்வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |