ரஷ்யாவில் அமெரிக்க இராணுவ வீரர் கைது
ரஷ்யாவில் (Russia) பெண் ஒருவரிடம் திருட முயன்றார் என்ற சந்தேகத்தின்பேரில் அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அதனை அமெரிக்கா (United States) உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த இராணுவ வீரர் தென் கொரியாவில் (South Korea) தங்கியிருந்ததாகவும், தனிப்பட்ட பயணத்திற்காக ரஷ்யாவிற்கு பயணம் செய்ததாகவும், உத்தியோகபூர்வ கடமைக்காக அல்ல என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்காவுக்கு தெரியும்
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேச பாதுகாப்புக்கான செய்தி தொடர்பாளர் ஜோன் கிர்பையிடம்(John Kirby), ரஷ்யாவில் அமெரிக்க ராணுவ வீரர் கைது செய்யப்பட்ட சம்பவம் பற்றி அறிந்திருக்கிறீர்களா? என கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், இந்த விடயம் பற்றி நாங்கள் நன்றாக அறிந்திருக்கிறோம் என கூறி அதனை உறுதிப்படுத்தினார்.
ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரகமும், அந்த இராணுவ வீரரை தொடர்பு கொள்ள தூதரக அனுமதி அளிக்க வேண்டும் என கோரியதுடன், அவருடைய குடும்பத்தினரிடம் கைது விபரங்களை பற்றி தெரிவித்து உள்ளது.
இது முதன்முறை அல்ல
ரஷ்யாவில், அமெரிக்க குடிமகன் ஒருவர் கைது செய்யப்படுவது என்பது முதன்முறையல்ல. இதற்கு முன், வோல் ஸ்ட்ரீட் ஜேனல் பத்திரிகையின் நிருபரான இவான் கெர்ஷ்கோவிச் (Evan Gershkovich) மற்றும் முன்னாள் கடற்படை வீரரான பால் வீலன் (Paul Whelan) ஆகியோரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இது தவறான கைது நடவடிக்கை என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்தது. கடந்த ஆண்டு ஜூலையில் தென்கொரியாவில் பணிக்கு நிறுத்தப்பட்ட அமெரிக்க வீரர் ஒருவர் தன்னிச்சையாக வடகொரியாவுக்குள் (North Korea) நுழைந்தபோது கைது செய்யப்பட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |