இலங்கை நிலை பற்றி அமெரிக்கா தான் ஐ.நாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் - கே.சிவஞானம்
அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையின் தற்போதைய நிலையை ஐ.நாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவரான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (23) யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலரை சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சி.வி.கே.சிவஞானம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
13ஆவது திருத்தம்

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாடாளுமன்றத்திற்கு இந்த விடயங்களை பாரப்படுத்த வேண்டிய தேவையில்லை, அரசியலமைப்பில் இருக்கின்ற விடயங்களை அதிபர் நடைமுறைப்படுத்த முடியும். என்ற இரண்டு விடயங்கள் நேற்றைய சந்திப்பில் பேசப்பட்டன.
ஆனால் அதிபரே 13ஆவது திருத்தத்தை நான் நடைமுறைப்படுத்துவேன் என்று சொல்லுகிறார், அப்படி இல்லை என்று எதிர்ப்பவர்கள் மாகாண சபை முறைமையை இல்லாது செய்ய சொல்லுகின்றார்கள். இதைப் பார்க்கும்போது அவரே மறைமுகமாக இதனை சொல்லி இருக்கின்றார் என தெரிகிறது.
வரி விதிப்பு

வரி விதிப்பை பொறுத்தவரை கோட்டபாயவிற்கும் தவறான ஆலோசனை வழங்கப்பட்டு தான் பொருளாதாரப் பிரச்சினை நாட்டுக்கு வந்தது, தற்போது இவர்களும் கல்விமான்கள், வைத்தியர்கள் போன்றோருக்கு புதிதாக வரி விதிப்பதன் மூலம் அவர்கள் வெளிநாடு செல்கின்ற போது மக்களையே அதிகம் பாதிக்கப் போகின்றது.
ஆனபடியால் அமெரிக்கா போன்ற நாடுகள் இந்த விடயங்களை இனி ஐக்கிய நாடுகள் மட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்“ என தெரிவித்தார்.