கொழும்பு ஹோட்டல் கழிப்பறையில் தோட்டாக்களை வீசிய அமெரிக்க காவல்துறை அதிகாரி : நீதிமன்றின் உத்தரவு
சிறிலங்கா காவல்துறையின் அதிகாரபூர்வ அழைப்பின் பேரில் உரை நிகழ்த்த இலங்கைக்கு வந்த அமெரிக்க காவல்துறை அதிகாரி ஒருவர், 17 உயிருள்ள தோட்டாக்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, சிறப்பு சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு ஹோட்டலில் உள்ள கழிப்பறையில் 17 தோட்டாக்கள் வீசப்பட்டசம்பவம் தொடர்பாக மைக்கேல் ஆண்ட்ரூ மேனன் என்ற அமெரிக்க காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார். நேற்று (17) கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரகே முன் அவர் முற்படுத்தப்பட்டார்.
கடவுச்சீட்டு நீதிமன்றத்தால் பறிமுதல்
ஐந்து லட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் அவரது கடவுச்சீட்டு நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்பட்டது, மேலும் அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டு, குடிவரவு கட்டுப்பாட்டாளருக்கு இது குறித்து அறிவிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டது, காவல்துறையின் அதிகாரபூர்வ அழைப்பின் பேரில் அவர் நாட்டிற்கு வந்தது, இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பிணை உத்தரவு வழங்கப்படுவதாக நீதிபதி கூறினார்.
காவல்துறைக்கு வகுப்பெடுக்க வந்த அதிகாரி
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, காவல்துறை அதிகாரியின் அழைப்பின் பேரில் சந்தேக நபர் நாட்டிற்கு வந்ததாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். மேலும், அவர் 9/11 தாக்குதலுக்குப் பிறகு நிறுவப்பட்ட ஒரு அமெரிக்க கூட்டாட்சி நிறுவனத்தின் முகவர் என்றும், தனது நாட்டில் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளைப் பயன்படுத்த அதிகாரம் பெற்றவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். அவரது பொதிகளில் தோட்டாக்கள் இருப்பது அவருக்குத் தெரியாது,
அமெரிக்கா, தோஹா மற்றும் கட்டுநாயக்கா ஆகிய மூன்று விமான நிலையங்களிலும் உள்ள பாதுகாப்பு அமைப்புகளால் அவை கண்டறியப்படவில்லை.
சந்தேக நபர், தான் கொண்டு வந்த வெடிமருந்துகளைப் பார்த்து பயந்து, தோட்டாக்களை அப்புறப்படுத்தியதாக சந்தேக நபரின் சார்பாக முன்னிலையான சட்டக் குழு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டால், அவர் தனது வேலையை இழக்க நேரிடும் என்பதால், அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கோரினர்.
உண்மைகளைக் கருத்தில் கொண்டு, வழக்கை வரும் 30 ஆம் திகதி தண்டனைக்காக மீண்டும் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
