தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு எப்போது? அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு
தொழிற் சங்கங்களுக்கும் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும், இடையில் 2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தம் நிறைவுக்கு வந்த பின்னரே, பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள நிர்ணய சபையின் ஊடாக அதிகரிக்கப்பட்ட நாளாந்தம் 1000 ரூபா வேதன அதிகரிப்பு எப்போது நடைமுறைக்கு வரும் என ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு பதில் வழங்கியுள்ள அமைச்சர், 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் இந்த மாத நடுப்பகுதியில் நிறைவடைகின்றது.
இதனை தொடர்ந்து பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான வேதனம் தொடர்பிலான நடவடிக்கை தொழில் அமைச்சரினால் முன்னெடுக்கப்படும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.