புகையிரதத்தில் தவறவிட்ட வெளிநாட்டவரின் பெறுமதியான பொருட்கள் - விரைந்து செயற்பட்ட ரயில்வே அதிகாரிகள்
கண்டியில் இருந்து புகையிரதத்தில் கொழும்பு கோட்டைக்கு வந்த பிரேசில் பிரஜை ஒருவரின் இலட்சக்கணக்கான ரூபா பெறுமதியான மடிக்கணனி கைத்தொலைபேசி, ஆயிரம் டொலர்கள் மற்றும் கடவுச்சீட்டு உள்ளிட்ட பெறுமதியான ஆவணங்கள் சிலவற்றைக் கண்டுபிடித்து ஒப்படைத்துள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் படையின் கோட்டை செயற்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
கண்டியில் இருந்து விரைவு ரயிலில் பிற்பகல் 2.20 மணியளவில் கொழும்பு கோட்டையை வந்தடைந்த பிரேசிலியர் அன்டோனியோ, தனது பையை தான் வந்த ரயிலில் மறந்து விட்டு வந்ததாக கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து இறங்கிய பின்னர் கோட்டை புகையிரத செயற்பாட்டு அலுவலகத்திற்கு வந்து தெரிவித்துள்ளார்.
புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உடனடி நடவடிக்கை

அதனையடுத்து, புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கியதையடுத்து, ரயில் ஏற்கனவே மருதானை சாலைக்கு ஓடிக்கொண்டிருந்தது.அதன்படி, பாதுகாப்பு அதிகாரிகள் ரயில் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு தகவல் அளித்து, மருதானை நிலையத்தில் ரயிலை நிறுத்துமாறு, தெரிவித்தனர்.
பிரேசிலியரின் பயணப்பொதிகள் குறித்து மருதானை நிலையத்திற்கு ரயில்வே பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு அதிகாரி திருமதி தமயந்தி தெரிவித்துள்ளார். குறித்த அறிவிப்பின் பிரகாரம், மருதானை புகையிரத நிலையத்தில் புகையிரத பெட்டிகளை பரிசோதித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி தமயந்தி, ஒரு பெட்டியில் வெளிநாட்டவரின் பயணப் பையை கண்டெடுத்துள்ளார்.
மருதானை புகையிரத நிலையம் விரைந்த அதிகாரிகள்

உடனடியாக கோட்டை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வெளிநாட்டவருடன் வாகனத்தில் மருதானை புகையிரத நிலையத்திற்குச் சென்று பயணப்பொதிகளை பெற்று மீண்டும் கோட்டை புகையிரத பாதுகாப்பு படை அலுவலகத்திற்கு வந்து பிரேசில் நாட்டவரானஅன்டோனியோவிடம் பொருட்களை ஒப்படைத்தனர்.
பொருட்களை பெற்றுக்கொண்ட பிரேசில் நாட்டை சேர்ந்த அன்டோனியோ, இந்த செயலை செய்த ரயில்வே பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்க மறக்கவில்லை.