வவுனியாவில் அதிக கட்டணம் அறவிட்ட தனியார் வைத்தியசாலைக்கு அபராதம்!
வவுனியாவில் முழு இரத்த பரிசோதனைக்காக (FBC) அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விட கூடுதல் தொகை அறவிட்ட தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் 500,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 67ஆம் இலக்க உத்தரவின் அடிப்படையில், வவுனியா மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை விசாரணை அதிகாரிகளால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கடந்த ஜூலை 14 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின்போது, 400 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட முழு இரத்தப் பரிசோதனைக்கு குறித்த வைத்தியசாலை 550 ரூபாய் கட்டணம் அறவிட்டமை கண்டறியப்பட்டது.
வவுனியா நீதவான் நீதிமன்றம்
இந்த வழக்கு ஜூலை 28 ஆம் திகதி வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிமன்றம் குறித்த வைத்தியசாலைக்கு 500,000 ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தது.

அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விட கூடுதல் தொகை அறவிடும் தனியார் வைத்தியசாலைகள் அல்லது மருத்துவ ஆய்வகங்கள் தொடர்பான தகவல்களை 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |