வவுனியா மாநகர சபையின் செங்கோல் மீட்பு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
காணாமல் போயிருந்த வவுனியா மாநகர சபையின் செங்கோல் மீட்கப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டதாக வவுனியா தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
வவுனியா மாநகர சபையின் செங்கோல், பதக்கம் மற்றும் முதல்வர் ஆடை என்பன காணாமல் போனதாக சபையின் செயலாளரால் வவுனியா தலைமை காவல் நிலையத்தில் கடந்த செவ்வாய்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் வவுனியா - ஓயார் சின்னக்குளம் பகுதியில் இருந்து மாநகர சபைக்குரிய செங்கோலை மீட்டெடுத்தனர்.
கைப்பற்றப்பட்ட செங்கோல்
முன்னாள் மேயர் அதனை வழங்குமாறு கூறியதாக குறிப்பிட்டு அவருடைய நண்பர் ஒருவர் அங்கு கொண்டுவந்து செங்கோலை வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அங்கு கைப்பற்றப்பட்ட செங்கோல் வவுனியா நீதிமன்றில் நேற்று (02.07.2026) காவல்துறையினரால் ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த செங்கோலை வவுனியா மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளரிடம் ஒப்படைக்குமாறு மன்றினால் காவல்துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதையடுத்து குறித்த செங்கோல் உள்ளூராட்சி உதவி ஆணையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் மேயர் மற்றும் பெண் ஒருவர் உட்பட 4 சந்தேக நபர்களையும் கைது செய்ய நீதிமன்ற அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும், அவர்கள் பயன்படுத்திய சொகுசு காரினையும் காவல்துறையினர் தேடி வருவதாகவும் வவுனியா தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |