புதிய தவிசாளராக போட்டியின்றி தெரிவு செய்யப்பட்ட கூட்டமைப்பின் பங்காளிக் கட்சி உறுப்பினர்!
வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் புதிய தவிசாளராக கூட்டமைப்பின் பங்காளிகட்சியான புளொட்டைச் சேர்ந்த தர்மலிங்கம் யோகராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்தமுறை இடம்பெற்ற உள்ளூராட்சிசபை தேர்தலில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை மற்றும் முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் ஆட்சியினை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியிருந்தது. அதற்கமைய சபையின் தவிசாளர், பதவியினை ஆட்சிகாலப் பகுதியில் இரண்டரை வருடங்கள் என பங்கிட்டு வகிப்பதற்கு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட் மற்றும் ரெலோ கட்சிகளிற்கிடையில் புரிந்துணர்வு ஒன்று கைச்சாத்திடப்பட்டிருந்தது.
அதற்கமைய வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம் மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர்கள் தமது பதவியினை ராஜினாமா செய்திருந்தனர். அந்தவகையில் கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் ஏற்கனவே தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், வவுனியா தெற்கு பிரதேச சபையின் புதிய தவிசாளருக்கான தேர்தல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிறஞ்சன் தலைமையில் இன்று இடம்பெற்றது.
குறித்த தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியினால் தமிழ்க் கூட்டமைப்பு சார்பில் புளொட் பிரதிநிதியான த.யோகராஜாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டதுடன் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினரால் வழிமொழியப்பட்டது. இந்நிலையில் வேறு கட்சிகளை சார்ந்தவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்படவில்லை.
இந்நிலையில் யோகராஜா போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டார். வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் மொத்தமாக 30 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதுடன் அதிகபட்சமாக, தமிழ் கூட்டமைப்பு 11 உறுப்பினர்களை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.