வவுனியாவில் கிராம சேவகர் அலுவலகங்களுக்கு படையெடுக்கும் மக்கள் - கொரோனா பரவும் அபாயம்
வவுனியாவில் இரண்டாம் கட்ட தடுப்பூசி பெறுவதற்காக ஆங்கில விண்ணப்பபடிவமொன்று கிராம சேவகர் ஊடாக வழங்கப்படுவதால் மக்கள் கிராம சேவகர் அலுவலகங்களை நோக்கி மக்கள் அதிகளவில் செல்லத்தொடங்கியுள்ளனர்.
இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இவ் விடயம் தொடர்பாக தெரியவருகையில்,
வவுனியாவில் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் செயற்பாடு நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந் நிலையில் தடுப்பூசியை பெற கிராம சேவகரிடம் விண்ணப்பத்தை பெற்று அதனை ஆங்கிலத்தில் நிரப்பி கிராம சேவகரின் கையொப்பம் பெற்று அதனை தடுப்பூசி வழங்கப்படும் இடங்களில் ஒப்படைக்க வேண்டும்.
இந் நடைமுறை முதலாம் கட்ட தடுப்பூசி பெறப்படும் போதும் நடைமுறைப்படுத்தப்பட்டமையால் மக்கள் கொரோனா அச்சம் காரணமாகவும் அலைச்சல் மற்றும் ஆங்கில படிவத்தை நிரப்ப ஆங்கிலம் தெரியாதவர்கள் நிரப்புவதற்கு அலைய வேண்டி இருந்தமையால் சிலர் தடுப்பூசியை பெற செல்லாது இருந்தனர்.
இந் நிலையில் இரண்டாம் கட்ட தடுப்பூசி போடும் போது ஊசி அட்டை இருந்த போதிலும் வேறு மாவட்டங்களில் பின்பற்றப்படாத புதிய நடைமுறையாக அதே விண்ணப்ப படிவத்தை நிரப்புவதற்காக மக்கள் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.
இதனால் ஊரடங்கு வேளையிலும் மக்கள் வீதியில் அலையும் நிலை வவுனியாவில் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் வவுனியா மாவட்டத்தில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் கிராம சேவகர் அலுவலகத்தில் மக்கள் அதிகளவில் ஒன்றுகூட வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.
எனவே இவ் விடயம் தொடர்பாக சுகாதார திணைக்கள அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.