பொய்த்துப்போனது நாடாளுமன்ற உறுப்பினரின் கூட்டம்!
வவுனியாவில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் நேற்று முன்தினம் கல்வி திணைக்கள அதிகாரிகளுடன் வவுனியா அபிவிருத்தி குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க. திலீபன் நடத்திய கூட்டத்தில் 80 வீத பாடசாலைகள் திறக்கும் என தெரிவிக்கப்பட்டது.
இருந்த போதிலும் அந்த கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் பொய்த்துப்போயுள்ளன. அதிபர் ஆசிரியர்கள் போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில் வவுனியா மாவட்டத்தில் பாடசாலையை ஆரம்பிப்பது தொடர்பில் அபிவிருத்தி குழு தலைவரினால் கடந்த செவ்வாய்க்கிழமை பிரதேச செயலகத்தில் கல்வித்திணைக்கள அதிகாரிகளுடன் சந்திப்பு இடம்பெற்றது.
இதன் போது பாடசாலைகள் 21 ஆம் திகதி அதிபர் ஆசிரியர்களுடன் திறக்கப்படும் எனவும் அது 80 வீதமாக இருக்கும் எனவும் கல்வித்திணைக்கள அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இன்று 21 ஆம் திகதி வவுனியாவில் ஒரு சில பாடசாலைகளை தவிர ஏனைய பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.
இதனூடாக அபிவிருத்தி குழு தலைவர் நடத்திய கூட்டம் பொய்த்துப்போயுள்ளதாக பலராலும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.