வெடுக்குநாறியில் அட்டகாசம்… ரணிலின் சிவராத்திரி வாழ்த்தின் மெய்முகம் இதுவா?
சிவபூமி எனப்படும் ஈழத்தில் சிவராத்திரி முக்கியமானதொரு வழிபாடாகும். இன்றைய நாளில் விரதமிருந்து இரவு முழுவதும் உறங்காதிருந்து, மூன்றுவேளைப் பூசைகளை முடித்து சிவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது.
இன்றைய நாளில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க சிவராத்திரிக்கு வாழ்த்தை பகிர்ந்திருந்தார், ஆனால் அதன் உண்மை அர்தத்தையும் மெய்முகத்தையும் வெடுக்குநாறி மலையில் இன்றைய நாளில் ஈழ மக்கள் கண்டுள்ளார்கள்.
அங்கு சிவாரத்திரி தின விரதத்தை போர்க்களமாக்கியுள்ளனர் சிறிலங்கா காவல்துறையினர். தெய்வங்களோடும் வன்மம் புரியும் தெய்வங்களோடும் போர் புரியும் சிறிலங்கா அரசின் கீழ் ஈழத் தமிழ் மக்கள் எப்படி வாழ முடியும் என்ற கசக்கும் உண்மையை உணர்த்திய நாளாகவும் இது அமைகிறது.
சிவபூமியில் சிவராத்திரி
ஈழத்தில் உள்ள சிவாலங்களில் மாத்திரமின்றி அனைத்து சைவ ஆலயங்களிலும் இன்றைக்கு மகா சிவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது.
தமிழகத்தில் திருவெண்ணாமலை ஆலயத்தைப்போல ஈழத்தில் திருக்கேதீஸ்வரத்தின் வழிபாடுகள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.
சிவராத்திரி என்பது சிவனிடத்தில் ஒடுங்கிய உலகை மீட்க உமாதேவியார் நோன்பிருந்த காலம் என்றும் பிரம்மாவுக்கும் விஷ்ணுவிற்கும் இடையிலான ஆணவத்தை அடக்கி சிவன் அமைதியடைந்த நாள் என்றும் ஐதீகங்கள் பலவுண்டு.
இன்றைய நாளில் அண்டத்தில் உள்ள கதிர் அலைகளின் தாக்கத்தால் மனித உடலில் உள்ள சுரப்பிகள், அமிலங்கள் வெளியேற்றத்தில் மாறுபாடு அடைவதாகவும் அப்போது, உறங்காமல் விடிய விடிய விழித்திருந்தால் அவற்றின் செயல்பாடு இரத்த அணுக்களை பாதிக்காது என்றும் எளிதில் செமிபாடடையும் உணவுகளை மட்டும் குறைந்த அளவில் சாப்பிட்டு அமைதியாக இருப்பது உடலுக்கு நல்லது என்றும் அறிவியல் பூர்வமான விளக்கம் கூறப்படுகிறது. இயற்கையை வெல்லும் உபாயமே சிவராத்திரி எனப்படுகிறது.
ஈழப்போராட்டத்தில் நோன்புப் போராட்டத்திற்கு மிக முக்கிய இடமுண்டு. திலீபன், அன்னை பூபதி ஆகியோர் தமிழ் மக்களின் விடிவுக்காக உண்ணா விரதமிருந்து உயிரை நீத்தவர்கள்.
சிவனுக்கு இன்றைய ஒரு நாள் தான் சிவராத்திரி. ஈழத் தமிழ் மக்களுக்கு ஒவ்வொரு நாளும் சிவராத்திரியே. ஈழத்தில் வரும் இரவுகள் எல்லாம் சிவராத்திரியே.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்கவும் சொந்த நிலத்தை மீட்கவும் நீதிக்காகவும் எங்கள் மக்கள் பனியிலும் குளிரிலும் உறங்காதிருக்கின்றனர்.
காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைக்காக தாய்மார்கள் உறங்காதிருக்கின்றனர். போரில் கொல்லப்பட்டவர்களுக்காக உறங்க முடியாது விழித்தே கிடக்கும் மக்களுக்கு எல்லா நாட்களும் சிவராத்திரியே.
என்ற போதும் இன்றைய நாளில் விரதமிருந்து சிவனிடத்தில் வேண்டுதல்களை வைப்பது மக்களின் பண்பாடும் வாழிபாட்டுரிமையுமாகும்.
வெடுக்குநாறியில் சிவராத்திரிக்கு தடை?
இதேவேளை வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
எனினும் ஆலயத்திற்கு செல்லும் மக்களை தடுக்கின்ற நடவடிக்கையில் சிறிலங்கா காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர், இதனால் மக்கள் பெரும் ஆத்திரமும் கவலையும் அடைந்தனர்.
அத்துடன் அங்கு ஐஸ்கிரீம் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரி ஒருவரை துரத்திய சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த ஆலயத்தில் ஐஸ்கிரீம் வியாபாரத்தில் ஈடுபடக்கூடாது என்றும் உள்நுழைய அனுமதிக்கப்படாது என்றும் அவ்வாறு சென்றால் சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும் என்றும் வியாபாரிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், செல்வராசா கஜேந்திரன், மற்றும் வேலன் சுவாமிகள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் ஆகியோர் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு ஒரு தொகுதி மக்களுடன் வழிபாடுகளுக்குச் சென்ற வேளை காவல்துறையினர் அதற்கு தடைவிதித்து அவர்களை செல்லவிடாமல் தடுத்திருந்தனர்.
இதனால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன் நீதிமன்ற அனுமதியுடன் சிவராத்திரி வழிபாடுகளுக்கு சென்றவர்கள்மீது அனுமதியின்றி அரச வனத்துக்குள் நுழைந்தமை, காவல்துறையினரின் கட்டளையை மீறி வாகனம் செலுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைதில் ஈடுபட்டுள்ள நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.
தாகத்தை தீர்க்கும் தண்ணீருக்குத் தடை
சிறிலங்கா அரசு ஈழத் தமிழ் மக்கள்மீது தண்ணீர் மற்றும் உணவுத் தடைகளை ஏற்படுத்தி போர்களை செய்து மக்களை அழித்த கதைகளை கடந்த காலத்தில் கண்டிருக்கிறோம்.
இப்போது வெடுக்குநாறிமலைக்கு வழிபாட்டுக்கு சென்ற மக்கள் குடிநீர் எடுத்துச் செல்ல தடை விதித்ததுடன், மக்களுக்கு அருகில் உள்ள எவரும் குடிநீர் வழங்கக் கூடாது என்றும் கட்டளை பிறப்பித்தமையும் ஆலயம் சென்ற பக்தர்களை பெரும் சீற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
குடிநீரை தடுப்பதன் ஊடாக மக்கள் ஆயலத்திற்கு செல்லவிடாமல் தடுத்துவிடலாம் என்ற உத்தியை இதில் சிறிலங்கா காவல்துறையினர் கையாண்டுள்ளனர்.
காவல்துறையின் இச் செயலை கண்டித்து மக்கள் கடும் சீற்றத்துடன் அவர்களை ஏசிய நிகழ்வுகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
தாகத்திற்கு குடிக்கும் குடிநீரை தடுக்கின்ற சிறிலங்கா காவல்துறையினரின் மிருகத்தனமான செயற்பாட்டை கண்டிப்பதாகவும் தமிழ் மக்கள் இன்னொரு நாட்டவர்கள் என்பதினால்தான் இவ்வாறு சிறிலங்கா அரசு அடக்கி ஒடுக்குகிறதா என்றும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதேவேளை குடிநீரை தடுத்த காவல்துறையினரை நோக்கி மக்கள் மிகக் கடுமையாக கேள்வி எழுப்பி ஏசியுள்ளனர்.
பதில் அளிக்க முடியாத நிலையில் காவல்துறையினர் அவ்விடத்தை விட்டு அகன்ற போதும் தொடர்ந்தும் சிவராத்திரி வழிபாடுகளுக்கு தடைகளையும் சிக்கல்களையும் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
ரணிலின் மெய்முகம் இதுவா?
சிவராத்திரி தினத்தை முன்னிட்டு சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று வாழ்த்துச் செய்தியை வெளியிட்டிருந்தார்.
அதில், உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களினால், அனைத்து உயிர்களையும் துன்பத்திலிருந்து விடுவிக்க சிவபெருமானிடம் செய்த பிரார்த்தனையை நினைவு கூறுவதாகவும், மனிதர்களிடம் இருக்கும் மமதையும், அகந்தையையும் அகற்ற உதவும் ஞானத்தைப் பரவச் செய்யும் வகையில் உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்கள் பிரார்த்தனை செய்வதாகவும் மகா சிவராத்திரி தினத்தை அர்த்தமுள்ளதாக்கும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் மேம்படுத்தி, மமதை, அகங்காரம் இல்லாத நாடாக அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் எதிர்காலத்திற்கான திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் ரணில் தனது வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.
ஒரு பக்கம் இவ்வாறு வாழ்த்தை தெரிவித்துவிட்டு மறுபக்கம் தனது உண்மை முகத்தை காட்டியுள்ளார், ஈழத் தமிழர்களுக்கும் சைவத்திற்கும் எதிரான தனது உண்மை முகத்தை வெடுக்குநாறியில் கட்டவிழ்த்துவிட்டுள்ள அடக்குமுறையின் மூலம் ரணில் தனது மெய்முகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இன்றைய தினம், காவல்துறையினர், வனவளத்திணைக்களம் மற்றும் தொல்லியல் சட்டத்தின்படி 6 மணிக்கு பின்னர் தொல்லியல் இடத்தில் பூசை வழிபாடுகளில் ஈடுபட முடியாது என்றும் ஆறு மணிக்கு பின்னர் வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோவிலில் இருந்து அனைவரும் வெளியேற வேண்டும் என்றும் மக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தனர். இதுவே ரணிலின் வாழ்த்தின் வெளிப்பாடும் செயற்பாடுமா?
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 08 March, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.