சாந்தன் மரணத்துக்கும் வெடுக்குநாறிமலை விவகாரத்துக்கும் இடையில் தொடர்பு?
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தின் சிவராத்திரி வழிபாடுகள் குழப்பப்பட்டது, பத்தர்கள், குருக்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் தாக்கப்பட்டது, - இவை அனைத்துமே இலங்கையில் நடைபெற்ற மிக மோசமான அடிப்படை மனித உரிமை மீறல் அடாவடித்தனம்.
இலங்கையின் ஒரு இனக் குழுமத்தின் மதச்சுதந்திரத்தைப் பறிக்கின்ற ஒரு செயல்.
அதேவேளை, இந்தச் சம்பவத்தின் பின்னணியில் ஏதாவது புவிசார் அரசியல் இருக்கின்றதா என்கின்ற கோணத்திலும், நாம் பார்த்தாகவேண்டிய தேவை இருக்கின்றது.
சாந்தன் மறைவு.. அவரது மறைவினால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சி.. இந்தியா மீது வெளிக்காண்பிக்கப்பட்ட கோபம்- இவற்றைத் திசைதிருப்பும் நோக்கம் வெடுக்குநாறிமலை விவகாரத்தின் பின்னணியில் இருக்கின்றதா?
கடந்த நவம்பர் மாதம் 3ம் திகதி இந்திய அரசாங்கம் இலங்கையின் பௌத்த விகாரைகளின் வளர்ச்சிக்கு என்று சுமார் 461.5 மில்லியன் ருபாய் நிதியை வழங்கியிருந்தது.
அதுவும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நேரடியாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு பௌத்த பீடங்களின் தலைவர்களைச் சந்தித்து, அந்த நிதியைக் கையளித்திருந்தார்.
பௌத்தத்தின் வளர்ச்சிக்கு என்று இந்தியாவினால் இலங்கையிடம் கையளிக்கப்பட்ட அந்தப் பெருந்தொகை நிதி குறிப்பாக என்னென்ன பயன்பாடுகளுக்கென்று கூறிக் கையளிக்கப்பட்டது தெரியுமா?
பௌத்த நினைவுச் சின்னங்களை புனரமைப்பது, பௌத்த விகாரைகளைக் கட்டுவது மற்றும் தொல்பொருள் செயற்பாடுகளுக்கு என்றும் அந்த பெரும் பணம் இந்தியாவினால் வழங்கப்பட்டது.
இலங்கையில் தமிழ் மக்களின் புனித பிரதேசங்கள், சைவ ஆலயங்கள், தமிழ் மக்களின் பாரம்பரிய அடையாளங்கள் போன்றன இலங்கையின் தொல்பொருள் திணைக்களத்தினாலும், பௌத்த துறவிகளினாலும் கபளீகரம் செய்யப்பட்டு வருகின்ற சந்தர்ப்பத்தில், அந்தக் காரியங்களை ஊக்குவிக்கும் வகையிலேயே இந்தியா நிதியை வழங்கியிருந்தது.
இந்தப் பின்னணியில்தான் வெடுக்குநாறிமலை விவகாரத்தை நோக்கியாகவேண்டிய நிர்ப்பந்தம் எழுகின்றது.
சாந்தனின் விகாரம் கொழுந்துவிட்டெழுந்து இந்தியத் தூதரகம் முற்றுகையிடப்படும் அளவுக்கு யாழில் நிலமை தீவிரமடைந்தபோதுதான், சிவராத்திரியின் போது வெடுக்குநாறிமலையை முற்றுகையிடப்போவதாக முதன்முதலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் ஒரு பௌத்த துறவி.
அதனைத் தொடர்ந்து கடந்த 6ம் திகதி காவல்துறை ஒரு அறிவித்தலை விடுத்திருந்தது. வெடுக்குநாறிமலையில் 8ம் திகதி மாலை 6 மணிக்குப் பின்னர் யார் இருந்தாலும் கைதுசெய்யப்படுவார்கள் என்று காவல்துறை அறிவித்திருந்தது.
கைசெய்யப்படுவார்கள் என்ற அச்சுறுத்தலின் மத்தியில் தமது உரிமைக்காகப் போராடுவதுதான் ஒரு உண்மையான போராட்டம். தமது உரிமைக்கான அந்தப் போராட்டத்தை பக்தர்கள் வெடுக்குநாறிமலையில் மேற்கொண்டதை தவறாக யாரும் கூறமுடியாது.
ஆனால் அந்தப் போராட்டத்தின் பின்னணியில் யாராவது இருக்கின்றார்களா என்றும் நாம் தேடியாகவேண்டி இருக்கின்றது.
கைதுசெய்யப்படுவதற்கான தூண்டுதல்கள் அங்கு இருந்திருக்கின்றதா என்று கொஞ்சம் நுணுக்கமாக ஆராயவேண்டி இருக்கின்றது.
ஏனென்றால் விளைவுகளை வைத்து காரணத்தை ஆராயவேண்டிய நிலையில் இருக்கின்ற தமிழ் மக்கள், சாந்தன் விவகாரத்தை மறைக்கின்ற இருகோட்டுத் தத்துவம் வெடுக்குநாறிமலை விவகாரத்தின் பின்னணியில் இருக்கின்றதா என்ற கோணத்தில் நாம் விடைதேடியேயாகவேண்டும் வேறுவழியில்லாமல்.