வெடுக்குநாறிமலையில் காவல்துறையின் அடாவடி: வெடிக்கப்போகும் பாரிய போராட்டம்
சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த தமது ஆலயத்தின் பரிபாலன சபையின் நிர்வாகிகள் மீதும், சிவ பக்தர்கள் மீதும் காவல்துறையினர் நடத்திய வன்முறைகளை எதிர்த்தும், கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள சிவபக்தர்களை விடுவிக்கக்கோரியும் பாரியளவிலான வெகுஜனப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பரிபாலன சபை தெரிவித்துள்ளது.
குறித்த போராட்டமானது, எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு நெடுங்கேணி சந்தியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதனை தொடர்ந்து, வவுனியா வடக்கு பிரதேச செயலகம் வரைக்கும் பேரணியாகச் சென்று, இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி மற்றும் இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுக்கான மகஜர் கையளிக்கப்படவுள்ளது.
கோரிக்கை
அதேவேளை, அரச அநீதிக்கு எதிரான இந்தப் போராட்டத்தில், அனைத்துத் தமிழ் மக்களையும், சமயம் சார்ந்த அமைப்புக்களையும், தமிழ் அரசியல்வாதிகளையும், தமிழ் உணர்வாளர்களையும், சிவில் சமூகத்தினரையும், பல்கலைக்கழக மாணவர்களையும், ஊடகங்களையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும், வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை எதிர்த்து நாடாளுமன்றை புறக்கணிக்குமாறு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |