கருணாவும் கத்தரிக்காயும் - கடுமையாகச் சாடிய சிவாஜி
கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற - வட மாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கடுமையாக சாடியுள்ளார்.
இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி பல்கலைக்கழக மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட "வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி" எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டமைக்காக தமிழ்தேசியக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தவத்திரு வேலன் சுவாமிகள் உள்ளடங்களாக ஏழு பேருக்கு எதிராக யாழ்ப்பாண காவல்துறையினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குறித்த வழக்கு விசாரணை இன்றைய தினம் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் இடம்பெற்றது. நீதிமன்ற வழக்கிற்கு பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் சிவாஜிலிங்கம் கடுமையாக சாடியுள்ளார்.
விடுதலைப்புலிகளின் தலைவருடைய விவகாரம்
விடுதலைப்புலிகளின் தலைவருடைய இறப்பை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறுகின்றீர்கள். ஆனால், கருணா என்பவர் இதற்கு மாறான தகவலை வெளியிட்டிருக்கிறார்.
இதற்கு உங்கள் பதில் என்னவாக இருக்கிறது என செய்தியாளர்கள் வினவிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
“ கருணாவும் கத்தரிக்காயும், ஒருவருடைய கருத்தும் எமக்கு தேவையில்லை. வேறு நபர்களின் கதைகள் எமக்கு தேவையில்லை.
அவர் என்ன துரோகம் செய்தார் என்பது யாவருக்கும் தெரியும். அவரது வியாக்கியானங்கள் தேவையில்லை” என்றார்.
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா
