விடுதலைப் புலிகளின் தலைவரது வாழ்க்கையை சித்தரிக்கும் மேதகு படத்திற்கு தடை! கம்போடியாவில் ஏற்பட்டுள்ள ஆர்வம்
கம்போடிய அரசியலில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் வாழ்க்கையை சித்தரிக்கும் மேதகு திரைப்படம் புதிய அதிர்வுகளை உருவாக்கியுள்ளது.
சிறிலங்கா அரசின் கோரிக்கையின் அடிப்படையில் மேதகு என்ற திரைப்படத்தின் ஒளிபரப்பை தடை செய்யுமாறு கம்போடியாவின் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அங்குள்ள தொலைக்காட்சி சேவைகளுக்கு அறிவுறுத்தலை அனுப்பியுள்ளார்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் ஆரம்பகால வாழ்க்கையை சித்தரிக்கும் மேதகு திரைப்படம் கம்போடியாவிலும் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது. கம்போடியாவின் சமூக ஊடகங்கள், வலைத்தளங்கள் மற்றும் BS Value app எனப்படும் செயலிகளில் இந்ததிரைப்படம் அதிகமாக பகிரப்பட்டதையடுத்து வரவேற்பைப்பெற்றிருந்த நிலையில் இந்தபடத்தை கம்போடிய தொலைக்காட்சிகளும் ஒளிபரப்ப தயாராகியிருந்தன.
இந்தநிலையில் இந்த விடயத்தை அறிந்துகொண்ட சிறிலங்கா அரசாங்கம் இதுகுறித்து கம்போடியாவிடம் அவசரமாக முறையிடடதை அடுத்து சிறிலங்கா அரசின் கோரிக்கையின் அடிப்படையில் மேதகுவின் ஒளிபரப்பை தடை செய்யுமாறு கம்போடியாவின் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் Khieu Kanharith கியே கன் ஹாரித் கம்போடிய தொலைக்காட்சி உரிமையாளர்களுக்கு கடந்தவாரம் கடிதத்தை அனுப்பியிருந்தார்.
இந்த செய்தி கம்போடியாவின் ஊடகங்களில் வெளியானதை அடுத்து தற்போது கம்போடியாவின் சமூக ஊடகங்கள், வலைத்தளங்களில் மேதகு திரைப்படத்தை பார்வையிடும் ஆர்வம் உருவாகியுள்ளதாக தெரியவருகிறது.