ஈழப் போரில் வௌ்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள்: சரத் பொன்சேகாவின் திடுக்கிடும் சாட்சியங்கள்!
ஈழப்போரின் இறுதி தருவாயில் கோட்டாபய ராஜபக்ச, சவேந்திர சில்வாவிடம் தொலைபேசியில் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வருபவர்கள் தொடர்பில் பேசியதாகவும் அதை காணொளி எடுத்த ஊடகவியலாளரை அவர்கள் கொலை செய்ய தேடியதாகவும் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.
யூடியூப் தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் தற்போது நாட்டைவிட்டு தப்பியோடி அமெரிக்காவில் வாழ்வதாகவும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.
சவேந்திர சில்வாவுக்கு தொலைபேசி அழைப்பு
மேலும் கருத்து தெரிவித்த அவர், “2009 ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி காலை ஊடகவியலாளர்கள் கூடியிருந்த நிலையில் சவேந்திர சில்வாவுக்கு வந்த தொலைபேசி அழைப்பில் அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச பேசினார்.
வௌ்ளைக் கொடியுடன் சரணடைய நாள் முழுவதும் வருவதாகவும் மூன்றாம் தரப்பிடம் சரணடைவது சாத்தியமில்லை எங்களிடம் தான் சரணடைய வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் சவேந்திர சில்வா ஊடகவியலாளர்கள் இருப்பது அறியாது கூறுகிறார்.
அதன்போது குறித்த தொலைபேசி உரையாடலை அங்கிருந்த ஒரு ஊடகவியலாளர் காணொளியில் பதிவு செய்கிறார்.
கொலை செய்ய தேடப்பட்ட ஊடகவியலாளர்
அந்த ஊடகவியலாளரை கொல்வதற்கு இவர்கள் தேடித்திரிந்தனர். அவர் அமெரிக்காவுக்கு தப்பிச்சென்று தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
குறித்த காணொளி இன்னும் என்னிடம் இருக்கிறது. 2009 மே மாதம் 17ஆம் திகதி இரவு 9.30க்கு தான் நான் சீனாவில் இருந்து இலங்கைக்கு வந்தேன்.
இறுதிப்போர் 17ஆம் திகதி அதிகாலை 2.30 மணிக்கு தான் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் 17ஆம் திகதி காலை முதல் கோட்டாபய மற்றும் பசில் ராஜபக்ச அனைவரும் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வருபவர்கள் தொடர்பில் நீண்ட காலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும், எனக்கு அது தொடர்பில் எதுவும் தெரிவிக்கவில்லை. இவ்விடயங்கள் தொடர்பில் பின்னரே அறியக் கிடைத்தது.” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
