கரூர் பெருந்துயரம்! த.வெ.க தலைவரிடம் விசாரணைகளை ஆரம்பித்த சி.பி.ஐ
புதிய இணைப்பு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக விசாரணைக்காக த.வெ.க தலைவரும் நடிகருமான விஜய் மத்திய புலனாய்வுப் பிரிவில் (சிபிஐ) முன்னிலையாகியுள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் திகதி தமிழ்நாட்டின் கரூரில் அவர் உரையாற்றிய பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலை விசாரிக்கும் குழுவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தில் 41 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் விஜயிடம் சிபிஐ முன்வைக்க உள்ள முக்கிய கேள்விகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய கேள்விகள்
1. "நிகழ்ச்சி நடைபெறும் நாளில் இறுதி முடிவு யாருடையது?
2. கூட்டம் அதிகமாகிறது என்று தகவல் வந்தபோது நிகழ்ச்சியை தொடரச் சொன்னது யார்?
3. மேடையில் இருந்தபோது பாதுகாப்பு அதிகாரிகளுடன் நேரடி தொடர்பு இருந்ததா?
4. கூட்ட நெரிசல் ஏற்பட்ட அந்த நிமிடங்களில் நீங்கள் எங்கே இருந்தீர்கள்?
5. காயமடைந்தவர்கள் பற்றி உடனடி தகவல் கிடைத்ததா?
6. மேடையிலிருந்து பின்வாங்குங்கள், அமைதியாக இருங்கள் போன்ற அறிவுறுத்தல் கொடுக்க முயற்சி செய்தீர்களா?
7. கரூர் மாவட்ட நிர்வாகம், காவல்துறை ஆகியவற்றிடமிருந்து முன்அனுமதி பெறப்பட்டதா?
8. கூட்ட அளவு, நேரம், பாதுகாப்பு போன்ற காவல்துறையின் நிபந்தனைகள் பின்பற்றப்பட்டதா?
9. பாதுகாப்பு பணியாளர்கள், தடுப்புகள், நுழைவு–வெளியேற்ற வழிகள் இருந்ததா?
10. கூட்டம் திடீரென அதிகரித்ததை யார் கவனித்தனர், என்ன நடவடிக்கை எடுத்தனர்?” என்ற கேள்விகள் முன்வைக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முதலாம் இணைப்பு
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று டெல்லியிலுள்ள சி.பி.ஐ அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் முன்னிலையாகும் படி தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.
முழு பாதுகாப்பு
அதன்படி, இன்று காலை 11 மணி அளவில் சி.பி.ஐ. அலுவலகத்தில் முன்னிலையாவதற்காக தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

தவெக தலைவர் விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி டெல்லி காவல்துறையிடம் அக்கட்சி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனையடுத்து, அக்கோரிக்கையை ஏற்ற டெல்லி காவல்துறை விஜய்க்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனி விமானத்தில் டெல்லி செல்லும் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயுடன் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகியோர் உடன் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |