பிரபாகரன் என மகனுக்கு பெயர்சூட்டி, தமிழீழ பற்றை பறைச்சாற்றிய நடிகர் விஜயகாந்த் (காணொளி)
ஈழத்தமிழர் விவகாரங்களுக்கு முன்னர் குரல் கொடுத்து வந்த நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவின் காரணமாக இன்று காலமானார்.
நடிகர் விஜயகாந்த் 1984 ஆம் ஆண்டு ஈழத்தமிழர்கள் மீதான படுகொலையைக் கண்டித்து சக நடிகர், நடிகைகளுடன் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தியதுடன், அவற்றை நிறுத்துவதற்கும் நீதி வேண்டியும் தமிழக ஆளுநருக்கு மனுவொன்றை கையளித்திருந்தார்.
அத்தோடு, 1986 ஆம் ஆண்டு ஈழத்தமிழர்களுக்காக சென்னை வட்டாட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டது மட்டுமல்லாமல், அவரின் இரசிகர் மன்றத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாகவும் உண்ணாவிரத போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
தமிழீழம் மீதான பற்று
அத்துடன், தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்காகக் குரல்கொடுத்து வந்த அவர், 1989 ஆம் ஆண்டுகளில் மண்டபம் உள்ளிட்ட முகாம்களில் அகதிகளாக வசிப்பவர்களுக்கு உதவி புரிந்தும் வந்துள்ளார்.
மேலும், "ஈழத்தமிழர்கள் அழும் போது, என்னால் கொண்டாட்டத்தில் இருக்க முடியாது" என்று கூறி தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்தார்.
தலைவர் பிரபாகரன் மீதான பற்று
அதன் பின்னர் விஜயகாந்தின் பிறந்த நாள் வறுமை ஒழிப்பு தினமாக அறிவிக்கப்பட்டு, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வந்தன.
அதேவேளை, தனது 100வது திரைப்படத்திற்கு 'கேப்டன் பிரபாகரன்' எனவும், தனது மூத்த மகனுக்கு 'விஜய பிரபாகரன்' எனவும் பெயர்வைத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மீதும், ஈழத்தின் மீதும் தனக்கிருந்த பற்றைப் வெளிப்பிடுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |