கெஹலிய பெற்ற நட்டஈட்டில் கிளிநொச்சியில் கிராமமே அமைத்திருக்கலாம் என விபரிப்பு
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல(keheliya rambukwella)நட்டஈடாக பெற்றுக்கொண்ட பணத்தில், கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கிராமம் ஒன்றையே அமைத்திருக்கலாம் என அமைச்சர் பிமல் ரத்னாயக்க (bimal rathnayake)தெரிவித்தார்.
'க்ளீன் ஶ்ரீலங்கா' திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் கிளிநொச்சிக்கு இன்று (9) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் பிமல் ரத்னாயக்க கிளிநொச்சி தொடருந்து நிலையத்துக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட போதே இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சியில் கிராமம் அமைத்திருக்கலாம்
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகபட்சமாக 5 இலட்சம், 7 இலட்சம், இறுதியாக 10 இலட்சம் ரூபாவே வழங்கப்பட்டது. ஆனால், கடந்த கால அமைச்சர்கள் பல இலட்சங்களை அவர்களது வீடுகளுக்காக நட்டஈடாக பெற்றுக்கொண்டுள்ளனர்.
உதாரணமாக கெஹலிய ரம்புக்வெல்ல பெற்ற நட்டஈட்டுத் தொகையை வைத்து இங்கு கிராமம் ஒன்றையே அமைத்திருக்கலாம் என்றார்.
பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகள்
பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகள் நாடு முழுவதும் காணப்படுகின்றன. அது போல கடமைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஊதியம் போதாது. அவர்களின் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும். அந்த பிரச்சினைக்கு மக்களுடனும் கலந்துரையாடி தீர்வு எட்டப்பட வேண்டும். அதனை விரைவில் செய்வோம்.
கிளிநொச்சி(kilinochchi) வைத்தியசாலையில் மின்பிறப்பாக்கி இயங்காத விடயம் தொடர்பில் எமது மாவட்ட அமைப்பாளர் பார்வையிட்டு, சுகாதார அமைச்சுக்கு தகவல் வழங்கியதும் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அரகலய போராட்டத்தின்போது தமது உடமைகளும் எரிக்கப்பட்டதாக தெரிவித்து நட்டஈடாக முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ரூபா 959 இலட்சத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)