சர்ச்சைக்குரிய மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் : சாணக்கியன் எம்.பியின் வேண்டுகோள்
நாட்டில் சட்டவிரோதமாக வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்ய வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (R.Shanakiyan) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி நிதியத்திலே இருந்து முறைகேடாக நிதியை பெற்றிருக்கின்றார்கள் என்றால் அந்த நிதியை மீளப்பெற வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மட்டக்களப்பில் (Batticaloa) நேற்று (09.02.2025) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அரசியல்வாதிகள் பணம் பெற்றனர்
இங்கு மேலும் தெரிவிக்கையில், ”அரசியல்வாதிகளுக்கு மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டதாக சொல்லப்பட்டது. வழங்கப்பட்ட பட்டியலையும் வாசித்தார்கள், அதற்குப் பிறகு எந்த நடவடிக்கையையும் காணவில்லை.
ஜனாதிபதி நிதியத்தில் இருந்து அரசியல்வாதிகள் பணம் பெற்றதாக ஒரு பட்டியல் வாசிக்கப்பட்டது. அதன் பின்னரும் ஒன்றும் நடைபெறவில்லை, பட்டியல்களை அனைவரும் வெளியிடலாம் ஆனால் அவர்களிடம் இருக்கின்ற பணத்தினை மீளப் பெறவேண்டும்.
மக்களுடைய பணத்தை முறைகேடாக நஷ்டஈடாக எடுத்து இருக்கின்றார்கள் என்றால் அரசாங்கத்தில் இருக்கின்றவர்கள் பட்டியல்களை வெளியிட்டால் மாத்திரம் போதாது நிதியைப் பெற்றவர்களிடம் இருந்து மீள அந்த நிதியை பெறவேண்டும்.
அதை விட்டுவிட்டு அரசாங்கத்தில் இருக்கின்ற அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் வந்து பட்டியல்களை வாசிப்பதன் ஊடாக மக்களுக்கு மக்கள் எதிர்பார்த்த ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்கு முடியாது என்பதில் மக்களுக்கு நம்பிக்கை வராது.
இந்த அரசாங்கத்தை குழப்புவதற்கோ, அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிடுவதற்காக நாங்கள் வரவில்லை. சில ஊடகங்கள் அரசாங்கத்தினுடைய எல்லா விடயங்களையும் சரி என்னும் அளவிற்கு வந்துதான் இருக்கின்றன. அது கவலையான விடயம்.
அரச ஊடகம் என்றாலும் சமமாக செய்திகளை வெளியிட வேண்டும். அந்த வகையிலே எதிர்வரும் காலங்களில் நாட்டிலே புதிய அரசியல் அமைப்பு ஒன்று வரும் என்பதை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஜனாதிபதியும் நாட்டிலே ஒரு புதிய அரசியல் அமைப்பைக் கொண்டு வருவோம் என கூறியிருக்கின்றார்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |